அமைச்சர் எ.வ.வேலு கோப்புப்படம்
தமிழ்நாடு

திமுக அமைச்சர், பிரமுகர்களின் இடங்களில் தொடரும் வருமான வரி சோதனை

கரூர் பெரியார் நகரில் உள்ள திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மா என்பவரின் வீடு, விழுப்புரம் சண்முகபுர காலனி பகுதியில் வசிக்கும் பிரேம் என்பவரின் வீடு உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று ஐ.டி சோதனை நடைபெற்று வருகிறது.

PT WEB

அமைச்சர் எ.வ வேலு வீடு உள்பட அவர் தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு திமுக பிரமுகர்களின் இல்லங்களிலும் இன்று காலை முதலே வருமானவரித்துறை சோதனை தொடர்கிறது.

கோவை ராமநாதபுரத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினரான திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமார் என்பவர் இல்லத்தில் காலை முதலே வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது. மீனா ஜெயக்குமாரின் கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். முன்னதாக மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீராம் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள், சுமார் 2 மணி நேரம் சோதனை நடத்தினர்.

அமைச்சர் ஏ.வ வேலு உறவினர் மீனா ஜெயக்குமார்

இவர்களின் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரியும் எஸ்.எம். சுவாமி என்பவரின் சிங்காநல்லூர் வீட்டிலும் சோதனை தொடர்கிறது.

கரூர் பெரியார் நகரில் உள்ள, திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மா என்பவரின் வீடு உள்பட மூன்று இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல விழுப்புரம் சண்முகபுர காலனி பகுதியில் வசிக்கும் பிரேம் என்பவரின் இடங்களிலும் சோதனை தொடர்கிறது. இப்படியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் 5 இடங்களிலும், கரூரில் 4 இடங்களிலும் வருமான வரி சோதனை நீடித்து வருகிறது.