பொதுத்தேர்தலில் கணக்கில் வராத பணம் பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக பொதுமக்களுக்கு வருமான வரித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என, தேர்தல் ஆணையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் கணக்கில் வராத பணத்தை எடுத்துச் செல்பவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கணக்கில் வராத பணம் பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக பொதுமக்களுக்கு வருமான வரித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. அதில் பெரிய அளவில் ரொக்கம் பதுக்கப்பட்டிருப்பதாகவோ அல்லது இடமாற்றம் செய்யப்படுவதாகவோ தெரியவந்தால் அதுகுறித்து தகவல் தெரிவிக்கலாம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் விலை மதிப்பு மிக்க பொருட்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுவது தெரியவந்தாலும் தகவல் அளிக்கலாம் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இது தவிர தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்கள் தகவல் அளிப்பதற்காக 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 18004256669 அல்லது 044-28262357 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9445467707 என்ற வாட்ஸ்அப் எண்ணிலோ தகவல் கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது,