'அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு' என்ற பெயரில் மதுரையில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 20) இபிஎஸ் தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் மாநாடு நடைபெற்றது. காலை தொடங்கிய இந்த மாநாட்டின் நிகழ்ச்சிகள், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உரையுடன் இரவு 8 மணியை கடந்து நிறைவு செய்யப்பட்டது.
இம்மாநாட்டிற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து பேருந்துகளிலும், வேன்களிலும், கார்களிலும் அதிமுக தொண்டர்கள் சென்றனர். 15 லட்சம் பேர் கூடுவார்கள் என அதிமுக தரப்பில் சொல்லப்பட்டது. மாநாட்டிற்கு சில தினங்கள் முன் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் “15 லட்சம் தொண்டர்கள், 40,000 வாகனங்கள் என மிகப்பெரிய அளவில் மாநாடு நடத்தப்படும்” என அறிவித்தனர்.
இடையே மாநாட்டிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலும் அதிமுகவிற்கு ஆதரவாகவே தீர்ப்புகள் வழங்கப்பட்டன. இப்படி பல தடைகளை கடந்து நடந்த மாநாட்டிற்கு, முந்தைய நாளே தொண்டர்களுக்கான உணவு ஏற்பாடுகள் தொடங்கின. முதல் நாள் வரை அனைத்தும் சரியாகவே நடந்தது. ஆனால் மாநாடு நாளின் காலையிலேயே சர்ச்சைகள் வெடிக்க ஆரம்பித்தன. அப்படி என்ன நடந்தது? ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்ததா? பார்ப்போம்...
காலையே அதிமுக வாகனங்கள் மாநாட்டிற்கு அணிவகுத்தன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எந்தக் கட்சி மாநாடு, பொது கூட்டம் நடத்தினாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுமென்றாலும் மதுரை தேசிய நெடுஞ்சாலை உட்பட அனைத்து புறவழிசாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளானர். அதிலும் ஆகஸ்ட் 20 முகூர்த்த தினம் என்பதால், சுப நிகழ்வுகளுக்குச் செல்லும் வாகனங்களும் மக்களும் இன்னும் இன்னும் கூடினர். இப்படி மொத்தமாக எல்லோரும் கூட, கடுமையான நெரிசல் ஏற்பட்டு மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டனர்.
மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு ஆரஞ்ச் ஜூஸ் வழங்கிய அதிமுகவினர் சரியாக தண்ணீர் தரவில்லை என்ற புகார்கள் எழுந்தன. 15 லட்சம் பேர் கூடுவார்கள் என அக்கட்சியின் பொதுச்செயலாளரே கூறியபோதும் அவர்களது அடிப்படை வசதிகளை மாநாடு ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தது.
கொடுக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில் வாட்டர்களும் விரைந்து தீர்ந்து, அவையும் அங்கே மலைபோல் குவிந்துகிடந்தது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டில் சமைக்கப்பட்ட உணவுகள் தரமில்லாமலும் சுவையில்லாமலும் இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. உணவுகளை வாங்கிய தொண்டர்கள் சரியாக உண்ணாமல் அதை கீழே கொட்டிச் சென்ற புகைப்படங்களும் வெளியானது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இது குறித்து பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் ஜவஹர் அலி, “20 லட்சம் மக்கள் கூடிய எழுச்சி மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் 5 லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டது. 5 லட்சம் பேருக்கு உணவு தயாரிப்பது என்பது மிகப்பெரிய வேலை. இந்த உணவு விநியோகிக்கப்படுவதற்காக நிறைய Counters இருந்தன. இதில் ஏதாவது ஒரு Counter-இல் இத்தவறு நிகழ்ந்திருக்கலாம். ஆனால், எல்லா உணவு Countersகளுக்கும் நான்கூடச் சென்று சாப்பிட்டேன். சாம்பார் சாதம் விநியோகிக்கப்பட்டது. அருமையாக இருந்தது.
ஒரே நேரத்தில் 5 லட்சம் பேருக்கு சமையல் செய்ய முடியாது. இதை கருத்தில்கொண்டு சில உணவுகளை முன்கூட்டியே முதல்நாளே கொஞ்சம் சீக்கிரமாக அவர்கள் செய்திருக்கலாம். அதில் ஏதாவது தவறு ஏற்பட்டிருக்கலாம். எனக்கு இது உறுதியாக தெரியவில்லை. இதை ஒரு பெரிய குறையாகக் கண்டுபிடித்து எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்துகின்றன” என்றார்.
இதில் உள்ள முரண் என்னெவெனில். 1.25 லட்சம் இருக்கைகள் போடப்பட்டதாக செய்திகள் வெளியானது. அதிமுகவினரோ 15, 20 லட்சம் வரை மாநாட்டில் தொண்டர்கள் கலந்து கொண்டனர் என்கின்றனர். ஆனால் சமைக்கப்பட்ட உணவு அதிமுகவினர் கூற்றுப்படி 5 லட்சம் பேருக்குத்தான்.
மாநாட்டினால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால், சுற்றுவட்டப் பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு முறையாக வழிவிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. போக்குவரத்து நெரிசலால் அது திருப்பி அனுப்பப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இதனால் நோயாளிகள் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.
மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு எதிர்பாராத விதமாக அசம்பாவிதம் ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அவசர மருத்துவ சிகிச்சை முகாம்கள் உள்ளேயே அமைக்கப்பட்டிருந்தது. அப்படி இருந்தும் 8 பேர் பலியாகியுள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கும் எடப்பாடி பழனிசாமி 6 லட்சம் நிவாரணம் அளித்துள்ளார். ஆனாலும் மருத்துவ முகாம்களில் தொண்டர்கள் சில காயங்களுடன் சிகிச்சை பெற்ற வண்ணமே இருந்ததை காண முடிந்தது.
மாநாடு தொடங்குவதற்கு சில தினங்கள் முன்பிருந்தே எழுந்த முக்கியமான ஒரு குற்றச்சாட்டு, மதுரையில் பெரும்பாலான இடங்களில் அதிமுகவினர் ஆபத்தான முறையில் சட்டவிரோதமாக பேனர்கள், கட்-அவுட் வைத்துள்ளார்கள் என்பது. இது குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி காவல்துறையிடமும் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் ஆபத்தான நிலையில் வைக்கப்பட்ட கம்பிகள் பல, வாகனங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததும் நடந்தது.
மாநாட்டின் காரணமாக அப்பகுதியினை சுற்றி இருந்த டாஸ்மாக்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தது. இதனால் முகம் சுளிக்க வைக்கும் விதமாக பல சம்பவங்கள் நடந்தன. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இதுகுறித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்திய நிகழ்வுகளும் நடந்தன.
இப்படி இன்னும்கூட சில நடந்தன. எது எப்படி இருந்தாலும் மாநாட்டை ஒருங்கிணைத்தவர்கள் இன்னும் சிறிது மெனக்கெட்டு இருந்தால் பல அசம்பாவிதங்களை தவிர்த்திருக்கலாம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.