பாதிக்கப்பட்ட பெண் மாலதி PT WEB
தமிழ்நாடு

6லட்சம் கடனுக்காக துணை நடிகரின் மனைவி 2 மாதம் அடைத்துவைத்து கொடுமை?-பாஜக பெண் நிர்வாகியிடம் விசாரணை!

விமல் ராஜ்

திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை அருகே உள்ள விஸ்வாஸ் நகரைச் சேர்ந்தவர் மதியழகன் (55). இவர் சினிமாவில் துணை நடிகராக உள்ளார். இவரது மனைவி மாலதி (46). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார் . விஸ்வாஸ் நகரைச் சேர்ந்த பாஜக நிர்வாகி உமாராணி (55) என்பவரிடம், மாலதி 6 லட்ச ரூபாய் கந்து வட்டிக்குக் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால், உமாராணி தனது வீட்டில் உள்ள தனி அறையில் கடந்த 2 மாத காலமாக மாலதியயை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து உமாராணியின் வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார், தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மாலதியைப் பத்திரமாக மீட்டனர். அப்போது பதட்டமான நிலையில் இருந்த மாலதி கண்ணீர் மல்க போலீசாரின் கால்களில் விழுந்து நன்றி தெரிவித்த காட்சி காண்போரைக் கண்கலங்கச் செய்தது.

இதனைத்தொடர்ந்து, உமாராணியை, போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், "திருச்சியில் மாலதி பல பேரிடம் கடன் வாங்கி வைத்திருக்கிறார். கடன் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அவரை காப்பாற்றவே எனது வீட்டில் பாதுகாப்பாகத் தங்க வைத்தேன். அவரை அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்துவதாகக் கூறுவது தவறு. அவருக்குப் புதிதாக ஒரு ஜாக்கெட் கூட தைத்து வைத்திருக்கிறேன்" என்றார்.

பாஜக நிர்வாக உமராணியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.