தமிழ்நாடு

5 நாட்களில் 6.41 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் இலவச பயணம்

webteam

சென்னை மெட்ரோ ரயில் கடந்த ஐந்து நாட்களில் 6 லட்சத்து 41 ஆயிரத்து 524 பேர் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.

சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலும், டி.எம்.எஸ் முதல் விமான நிலையம் வரையிலும் புதிய சேவை கடந்த 25ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சோதனை ஓட்டம் என்பதால் மக்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். முதல் நாளான மே 25ஆம் தேதி 50 ஆயிரம் பேரும், அடுத்து 26ஆம் தேதி ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 500 பேரும் மெட்ரோ ரயிலில் இலவச பயணம் மேற்கொண்டுள்ளனர். 

மேலும், விடுமுறை நாளான மே 27ஆம் தேதி அதிகபட்சமாக ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 518 பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். அடுத்த இரண்டு நாட்களுக்கு இலவச பயணம் நீட்டிக்கப்பட்ட நிலையில், மே 28ஆம் தேதி ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 520 பேர் பயணித்துள்ளனர். இலவச பயணத்தின் கடைசி நாளான நேற்று மெட்ரோ ரயிலில் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 986 பேர் பயணம் செய்துள்ளனர்.