தமிழ்நாடு

தெருநாய்களால் தொடரும் விபத்துகள்.. 10 பேர் உயிரிழப்பு

தெருநாய்களால் தொடரும் விபத்துகள்.. 10 பேர் உயிரிழப்பு

webteam

மதுரையில் கடந்த 6 மாதங்களில் தெரு நாய்களால் ஏற்பட்ட சாலை விபத்துகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் தெரு நாய்களால் சாலை விபத்துகள் ஏற்படுவது சமீபத்தில் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த 6 மாதங்களில் இந்த விபத்துகளில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. மேலும் தீபாவளி நாளான 27ஆம் தேதி மட்டும் ஒரேநாளில் தெருநாய்களால் ஏற்பட்ட சாலை விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 

தெருநாய்களால் ஏற்படும் சாலை விபத்துகள் மதுரை நகர்புறங்களைவிட கிராம புறங்களிலே அதிகமாக உள்ளது என்பதும் இந்தத் தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. ஏனென்றால் கிராம புறங்களில் சாலை போக்குவரத்து நெரிசல் குறைந்து காணப்படுவதால் இருசக்ர வாகன ஓட்டுநர்கள் வேகமாக வாகனத்தை இயக்கும்போது, நடுவில் தெருநாய்கள் வந்து விபத்து ஏற்படுகிறது. மேலும் இந்த விபத்துகள் முறையாக பதியப்படுவதும் இல்லாததால், இந்த வகை விபத்துகள் குறித்து சரியான தரவுகள் கிடைப்பது கடினம் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் ஒரு ஆண்டிற்கு தோராயமாக தெருநாய்களால் 100 விபத்துகள் ஏற்படுகிறது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தெருநாய்களால் ஏற்படும் உயிரிழப்புகளில் வாகன ஓட்டுநர்கள் தங்களின் வாகனத்தை அதிவேகமாக இயக்கியதே காரணமாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.