தமிழ்நாடு

காதலி வீடு என நினைத்து நடிகையின் வீட்டுக்கு சென்று பெண் கேட்ட வாலிபர்! - எச்சரித்து அனுப்பிய போலீசார்

காதலி வீடு என நினைத்து நடிகையின் வீட்டுக்கு சென்று பெண் கேட்ட வாலிபர்! - எச்சரித்து அனுப்பிய போலீசார்

webteam

தன்னுடைய காதலி வீடு என நினைத்து சீரியல் நடிகையின் வீட்டுக்குச் சென்று பெண் கேட்ட வாலிபரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்

கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பாரத் (24). இவர் சென்னை வடபழனியில் உள்ள சீரியல் நடிகை ரித்திகாவின் வீட்டு கதவை தட்டியுள்ளார். கதவை திறந்த ரித்திகாவின் தந்தையிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பாரத், 'உங்கள் பெண்ணை எனக்கு திருமணம் செய்து தாருங்கள்' எனக் கூறியுள்ளார். ஏதும் புரியாத ரித்திகாவின் தந்தை, தவறான வீட்டுக்கு வந்துவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார். இதனைக் கேட்டுக்கொண்ட பாரத் அருகில் உள்ள வீடுகளுக்குச் சென்று தன் காதலியை தேடியுள்ளார்.

இது குறித்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார், பாரத்திடம் விசாரணை நடத்தி அவரின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.  சென்னை வந்த பாரத்தின் பெற்றோர், போலீசாரிடம் பாரத் குறித்த விவரத்தை தெரிவித்துள்ளனர். அதன்படி கோவையில் பொறியியல் படித்தபோது ஒரு பெண்ணை பாரத் காதலித்துள்ளார். இருவரும் பிரிந்துவிட,  மன அழுத்த நோயினால் பாரத் பாதிக்கப்பட்டுள்ளார்.

மன அழுத்த நோயுக்கான சிகிச்சையையும் தற்போது பாரத் பெற்று வருகிறார். கோவா செல்வதற்காக சென்னை வந்த அவர் விமானத்தை தவறவிட்டுள்ளார். இரண்டு நாட்களாக சென்னையில் சுற்றித்திரிந்தவர், காதலியை தேடிச் சென்று நடிகையின் வீட்டுக்கதவை தட்டியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

நடிகை ரித்திகா தரப்பில் இருந்து புகார் அளிக்கப்படவில்லை. அதனால் போலீசார் வழக்குப்பதிவும் செய்யவில்லை. பாரத்தின் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்த போலீசார், பாரத்தை அவர்களோடு அனுப்பி வைத்தனர்.