கோவை மாநகரில் ஆபரேஷன் ரீபூட் என்ற திட்டத்தின் மூலம் இடைநிற்றலுக்குள்ளான 173 பள்ளி மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையை காவல்துறை முன்னெடுத்துள்ளது. மாநகரில் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சி மாநகர காவலர் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், காவலர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக குடும்ப சூழ்நிலை காரணமாகவோ பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருந்ததாவோ தகாத நபர்களுடன் பழக்கம் ஏற்பட்டதாலோ பள்ளிக்கல்வியை பாதியில் நிறுத்திய நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களை காவல்துறை கண்டறிந்துள்ளது. பின் அவர்கள் குறித்து மாவட்ட கல்வி அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, இடைநிற்றல் மாணவர்களைத் தொடர்ந்து கண்காணித்து அவர்களையும் அவர்களுடைய பெற்றோரையும் சந்தித்து கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து பள்ளியில் சேர்ப்பதற்கான பணியை மாநகரின் ஒவ்வொரு காவல் நிலையமும் மேற்கொண்டுள்ளது.
அதிகபட்சமாக உக்கடம் காவல் நிலையத்தில் 15 மாணவ, மாணவிகளை சேர்த்துள்ளனர். காவல் நிலையத்தில் உள்ள காவல் அக்கா திட்டத்தில் பணி செய்பவர்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்தான வழக்குகள் பதியக்கூடிய காவலர்கள் மேலும் குழந்தைத் தொழிலாளர் தடுப்புப் பிரிவு போன்ற திட்டத்தில் பணிபுரியும் காவலர்களை உள்ளடக்கிய மூன்று பிரிவைச் சேர்ந்தவர்கள் தொடர் முயற்சியால் 173 மாணவ, மாணவிகளை மீண்டும் பள்ளிக்கு வருவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர். அதில் 153 பேர் தற்போது கோவை மாவட்டத்தில் இருப்பதாகவும் 20 பேர் வெளிமாநிலத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
காவலர்கள் மேலும் தெரிவிக்கையில், “ஒவ்வொரு மாணவரையும் சந்தித்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு படிக்க வர வேண்டும் என்று சொல்லியது மிகப்பெரிய சவாலாக இருந்தது. காரணம் ஒவ்வொரு மாணவருக்கும் பின்னால் ஒவ்வொரு பிரச்னையும், சூழலும் இருந்ததாகவும் அதில் முடிந்ததைச் செய்துகொடுத்து தற்போது மீண்டும் அவர்களைப் பள்ளியில் சேர்ப்பதற்கான பணியை செய்துள்ளோம். பெரும்பாலான மாணவர்கள் குடும்பச் சூழ்நிலை காரணமாகவும், அப்பா அம்மா இல்லாத நிலையிலும்தான் படிப்பைவிட்டுள்ளனர். ஒரு சில மாணவர்கள், தங்களைவிட வயதில் பெரிய நபருடன் பழகி பள்ளிப் படிப்பை விட்டுள்ளனர்.
நாங்கள் (காவலர்கள்) முதலில் வீட்டுக்கு சென்று அவர்களை பள்ளிக்கு அழைத்தபோது, பயமாக இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில்தான் அவர்களின் கல்வி குறித்தான செலவை ஏற்றுக்கொண்டு கல்வி படிப்பதற்கான அனைத்து நடவடிக்கையையும் நாங்களே மேற்கொண்டு தருவதாக உத்தரவாதம் அளித்தோம். அதைக்கேட்ட பின், ‘நாங்கள் மீண்டும் பள்ளிக்குச் வருகிறோம்’ என மாணவர்கள் தெரிவித்தனர். அதில் ஒரு சில மாணவர்கள் வேலைக்கும் செல்லாமல் மீன் பிடிப்பது, ஊர் சுற்றுவது போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தனர்” எனக்கூறப்பட்டது.
மாணவர்கள் தரப்பில், “காவலர்கள் எங்களுக்குச் சரியான அறிவுரை கொடுத்தனர். வீட்டில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த அப்பா அம்மாவை பார்த்துக் கொண்டிருப்பதற்காக பள்ளிப்படிப்பை விட்டடேன்” என ஒரு சில மாணவிகள் தெரிவித்தனர்.
காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ”இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுக்கும் வகையில் பள்ளி இடைநிற்றல் குழந்தைகளை ’ஆப்ரேசன் ரீபுட்’ என்ற பெயரில் மீண்டும் படிக்கவைக்கும் திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. போலீஸ் அக்கா திட்டத்தின் மூலம் பணியாற்றும் காவலர்கள் மூலம் இடைநிற்றல் குழந்தைகளைக் கண்டறிந்து பேசினோம். கோவை மாநகரில் 173 குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்துள்ளோம். 20 குழந்தைகள் வெளிமாநிலத்தில் உள்ளனர். இன்னும் 30 குழந்தைகளிடம் பேசி வருகிறோம்.
உறுதுணையாக இருந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு நன்றி. பள்ளி குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்குச் செல்ல வேண்டும். மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடைநிற்றல் குழந்தைகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும் திட்டமிட்டுள்ளோம். எதிர்கால வாய்ப்புகளை எடுத்துக்கூறி அவர்களைப் படிக்கவைக்க திட்டமிட்டுள்ளோம். பொருளாதார காரணத்தினால் இடைநிற்றல் குழந்தைகளுக்கு முடிந்த உதவிகளை செய்து மீண்டும் படிக்கவைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். 3 மாதங்களுக்கு ஒருமுறை இடைநிற்றல் மாணவர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்தார்.