தமிழ்நாடு

உசிலம்பட்டி: பழமையான பாடல்களை பறைசாற்றும் மாபெரும் இசைப் போட்டி திருவிழா!

உசிலம்பட்டி: பழமையான பாடல்களை பறைசாற்றும் மாபெரும் இசைப் போட்டி திருவிழா!

webteam

பழமையான நினைவுகளையும், கலாச்சார பாடல்களையும் பறைசாற்றும் வகையில் மதுரை உசிலம்பட்டி அருகே மாபெரும் இசைப் போட்டி திருவிழா நடைபெற்றுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு டி.எம்.சௌந்திராஜன் நினைவு மன்றம் சார்பில் பழைய பாடல்களை நிகழ்கால இளைஞர்களுக்கு கொண்டு செல்லும் வகையிலும், பழைய கலாச்சார பாடல்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும் மாபெரும் இசை போட்டி திருவிழா நடைபெற்றது.

இந்த இசை விழாவில் பழங்கால ரெக்கார்டர்கள் மற்றும் கூம்பு வடிவ குழாய் ஆகியவற்றில் பாடல்களை ஒலிபரப்பு செய்து அதில் வெற்றி பெற்ற முதல் 5 இடங்களை பிடிக்கும் நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் பெரும்பாலும் டிஎம்எஸ் பாடல்கள் மட்டுமே ஒலிபரப்ப அறிவுறுத்தப்பட்டு குலுக்கல் முறையில் இரு பிரிவினராக பிரித்து போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு போட்டியிலும் பாடல்களை சத்தமாகவும் தெளிவாகவும் ஒலிபரப்பு செய்யும் ஒலிபெருக்கி உரிமையாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த இசைத் திருவிழா போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சுமார் 200க்கும் மேற்பட்ட ஒலிப்பெருக்கி உரிமையாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் பங்கேற்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தனி வாடகை வாகனங்களை பிடித்து வந்து போட்டியில் பங்கேற்பது போன்று ஒவ்வொரு ஒலிப்பெருக்கி உரிமையாளர்களும் தனித்தனி வாகனங்களில் வந்து திருவிழா போல கலந்து கொண்டு சிறப்பித்தனர்.