தமிழ்நாடு

மனித கழிவுகளை மனிதனே அள்ளிய கொடுமை... பேரூராட்சி நிர்வாகம் மீது பரபரப்பு புகார்

மனித கழிவுகளை மனிதனே அள்ளிய கொடுமை... பேரூராட்சி நிர்வாகம் மீது பரபரப்பு புகார்

webteam

மாரண்டஅள்ளி பேரூராட்சியில் ஒப்பந்ததாரர் பணிக்கு தூய்மை பணியாளர்களை வைத்து மலத்தினை கையால் அள்ள வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாரண்ட அள்ளி என்ற பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் 15வது வார்டு அமைந்துள்ள அம்பேத்கர் நகரில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு குளியலறை வசதியுடன் பெண்கள், ஆண்கள் என இரு பாலரும் பயன்படுத்தக்கூடிய 12 கழிப்பிட அறைகள் பொதுக் கழிப்பிடமாக பேரூராட்சி நிர்வாகத்தால் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் போதிய பராமரிப்பு இல்லாததால் பொதுக் கழிப்பறைகள் அனைத்தும் தண்ணீர் இன்றி பழுதடைந்து துர்நாற்றம் வீசி வந்துள்ளது.

தற்போது அப்பகுதியில் திமுகவை சேர்ந்த பேரூராட்சி தலைவராக வெங்கடேசனும், பேரூராட்சி செயல் அலுவலராக சித்திரைக்கனியும் இருந்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில் தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு பணிச்சுமை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சம்பந்தமாக தூய்மை பணியாளர்களின் சங்கம் சார்பில்  மாவட்டம் நிர்வாகத்திடம் புகார் மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 15வது வார்டு பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடத்தை புதுப்பிக்கும் பணிக்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் விட்டு புதுப்பிக்கும் பணி தொடங்கியது. ஆனால் புதுப்பிக்கும் பணியை ஒப்பந்ததாரர் செய்ய வேண்டிய நிலையில், அந்த பணியை தூய்மைப் பணியாளர்களை கொண்டு செய்துள்ளனர். இந்த பொதுக் கழிப்பிடத்தில் உள்ள மலத்தை அள்ளுவதற்காக தூய்மை பணியாளர்கள்  வற்புறுத்தி பணி அமர்த்தியதாக கூறப்படுகிறது.

மேலும் சொல்லும் பணியை செய்யாவிட்டால் பணியில் இருந்து நீக்கி விடுவதாகவும்  மிரட்டல் விடுத்ததால், வேறு வழி இல்லாமல் பேரூராட்சி பணியாளர்கள் இருவர் மலத்தை தங்களது கைகளால் அள்ளி கழிப்பிடத்தை சுத்தம் செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தூய்மை பணியாளர்கள், பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். அப்பொழுது இந்த சம்பவத்தை வெளியில் தெரிவித்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், வேலையை விட்டு தூக்கி விடுவோம் என்று பேரூராட்சி நிர்வாகம் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சங்கத்தின் மூலமாக தேசிய தூய்மை பணியாளர்கள் உன் நல வாரியத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றக்கூடாது என அரசு தெரிவித்து வருகின்ற நிலையில் மாரண்டஅள்ளி பேரூராட்சியில் ஒப்பந்ததாரர் பணிக்கு தூய்மை பணியாளர்களை வைத்து மலத்தினை கையால் அள்ள வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே பணியாளர்களை இந்த வேலையில் ஈடுபடுத்திய பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்டோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மாரண்டஅள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரக்கனியிடம் கேட்டபோது, “தொழிலாளர்களை மலம் அள்ளுவதற்கு, நான் கட்டாயப்படுத்தவில்லை. என்னை பழிவாங்குவதற்காக தொழிலாளர்கள் இவ்வாறு குற்றச்சாட்டு தெரிவித்து அவதூறு பரப்புகின்றனர். என்னை மிரட்டுவதற்காகவே அவர்களே சென்று கழிவுகளை அகற்றி அதனை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர்” என கூறினார்.

மேலும் பொதுக் கழிப்பிடத்தை புதுப்பிக்கும் ஒப்பந்தம் விடப்பட்டவுடன் எங்களது பணி முடிவடைந்து விடுகிறது. அதில் நாங்கள் தூய்மை பணியாளர்களை பணியமத்துவதற்கான வேலை இல்லை. அதனை புதுப்பிப்பது ஒப்பாதாரரின் வேலை. ஒருவேளை ஒப்பந்ததாரிடம் இவர்கள் கூலிக்காக சென்று இருக்கலாம். அவ்வாறு சென்றிருந்தார்கள் என்றால் அது தவறு. அவர்கள் மீது பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்” என்றார்.