தமிழ்நாடு

மருந்தின் விலை ரூ.16 கோடி; நிதி திரட்டியும் ஜிஎஸ்டியால் மருந்து கிடைப்பதில் சிக்கல்

மருந்தின் விலை ரூ.16 கோடி; நிதி திரட்டியும் ஜிஎஸ்டியால் மருந்து கிடைப்பதில் சிக்கல்

JustinDurai
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் முதுகுத்தண்டுவட நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு போதிய நிதி கிடைத்தும், ஜிஎஸ்டி போன்ற வரிகளால் மருந்து கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
காந்திநகர் பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார்- பிரியதர்ஷினி தம்பதிக்கு மித்ரா என்ற இரண்டு வயது குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மித்ராவுக்கு நடப்பதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், அவருக்கு முதுகுத் தண்டுவடம் சிதைவு நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. இந்த நோயை குணப்படுத்துவதற்கான மருந்தின் விலை 16 கோடி ரூபாய் ஆகும். ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளை சேர்த்து 22 கோடி ரூபாய் தேவைப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சமூக வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு நண்பர்களின் உதவியுடன் 16 கோடி ரூபாயை மித்ராவின் பெற்றோர் திரட்டியுள்ளனர். இந்த நிலையில், வெளிநாட்டிலிருந்து மருந்து இறக்குமதி செய்யப்படுவதால், அதற்கான இறக்குமதி வரி, ஜிஎஸ்டி வரி ஆகியவற்றிற்கு மேலும், 6 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
இந்த வரிகளுக்கு விலக்கு அளித்து, மருந்து கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என மித்ராவின் பெற்றோர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். மத்திய அரசு உடனடியாக உதவ முன் வர வேண்டும் என மித்ராவின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.