உயிரிழந்த குழந்தைகள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

சென்னை மணலியில் நேர்ந்த சோகம்.. 3 குழந்தைகள் உட்பட நால்வர் பலி! என்ன நடந்தது?

சென்னையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த நான்கு பேர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

சென்னை, மணலி எம்எம்டிஏ பகுதியை சேர்ந்த உடையார் என்பவர் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரை கவனித்துக்கொள்ள, அவருடைய மனைவி மருத்துவமனையில் இருந்துள்ளார். இவர்களின் மூன்று மகள்களை, பாட்டியின் பராமரிப்பில் வீட்டில் தங்கவைத்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை வீட்டின் கதவு திறக்கப்படாமல் ஜன்னலில் இருந்து புகை வெளியே வந்துள்ளது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் உள்ளே சென்று பார்த்தபோது, பாட்டி மற்றும் மூன்று பேத்திகள் சடலமாக  கிடந்துள்ளனர். விரைந்து அவர்களது உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், வீட்டின் அறையில் இருந்த கொசு விரட்டி லிக்விட் இயந்திரம் எரிந்து உருகி அங்குள்ள அட்டைப்பெட்டி மீது பட்டு தீப்பற்றி எரிந்ததாக சொல்லப்பட்டது. அதில் புகை அறை முழுவதும் பரவியதால் நான்கு பேரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இருப்பினும் தடயவியல் துறையினர் விசாரணையில், வீட்டிலிருந்த டவர் ஃபேனில் தீப்பற்றியதுதான் விபத்துக்கு காரணம் என சொல்லப்பட்டது. இரு காரணங்களுமே இன்னும் உறுதியாகவில்லை. முழு விசாரணையும் முடிந்து, உடற்கூராய்வு அறிக்கை வெளிவந்த பின்னரே நால்வரின் இறப்புக்கும் என்ன காரணமென்பது உறுதியாகும்.