தமிழ்நாடு

48 மணி நேரத்தில் மத்திய அரசு முடிவை மாற்றிக் கொண்டதே காரணம்: மாணவி அனிதாவின் வழக்கறிஞர்

48 மணி நேரத்தில் மத்திய அரசு முடிவை மாற்றிக் கொண்டதே காரணம்: மாணவி அனிதாவின் வழக்கறிஞர்

rajakannan

ஓராண்டுக்கு விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு 48 மணி நேரத்தில் மத்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொண்டதே மாணவர்களின் மன உளைச்சலுக்கு காரணம் என்று மாணவி அனிதாவின் வழக்கறிஞர் சுரேஷ் பாபு தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா இன்று தூக்கிட்டு தற்கொலை கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து வழக்கறிஞர் சுரேஷ் பாபு கூறுகையில், ”கடைசியாக உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்ற போது மாணவி அனிதா உடன் இருந்தேன். 2 நாட்களில் ஓராண்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்துவிடும் என்று மாணவிகள் நம்பிக்கையுடன் இருந்தார்கள். மத்திய அரசின் ஒரு அமைச்சகமும் தமிழக அரசின் அவசர சட்ட வரைவுக்கு ஒப்புதல் அளித்தது. பின்னர் 48 மணி நேரத்தில் மத்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொண்டு தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்று தலைகீழாக தெரிவித்தது. ஏன் இந்த மனமாற்றம் ஏற்பட்டது என்று மத்திய அரசு தெரிவிக்கவில்லை. மாணவி அனிதா தற்கொலை செய்து கொள்ளவில்லை. மத்திய அரசின் திட்டமிட்ட செயல்தான் இந்த நிலையை உருவாக்கியுள்ளது” என்றார்.