விமானம் மோதி சுற்றுச் சுவரில் சேதம் (2018) pt web
தமிழ்நாடு

2018-யிலும் ஆபத்தில் சிக்கி மீண்ட ஏர் இந்தியா விமானம்.. திருச்சியில் ஏர் இந்தியாவின் ஒரு பழைய கதை!

ஏர் இந்தியா விமானம் ஆபத்தில் சிக்கி மீள்வது என்பது திருச்சி விமான நிலையத்திற்கு புதிதல்ல. 2018இல் என்ன நடந்தது?.. பயணிகள் உயிர்தப்பியது எப்படி?.. சற்று பின்னோக்கி பார்க்கலாம்...

PT WEB

திருச்சி விமான நிலையம் சர்வதேச அளவில், பல்வேறு வகையில் பாதுகாப்பான விமான நிலையங்களில் ஒன்றாகவே உள்ளது. ஏனெனில், மலை முகடுகளின் நடுவிலோ, உயர் கட்டடங்களின் மையத்திலோ இல்லாதது அதன் சிறப்பு. பெரும் சமவெளிப் பகுதி என்பதால், தரையிறங்குவதற்கும், வான்நோக்கி புறப்படுவதற்கும் கடினமாக இருக்காது. அதுமட்டுமின்றி, வெவ்வேறு முனைகளில் இருந்து இறங்கும் வாய்ப்புக் கொண்டது திருச்சி விமான நிலையம் என்பதையும் கூடுதல் சிறப்பாக கூறுகிறார்கள்.

பத்திரமாக தரையிறங்கிய விமானம் (தற்போது)

2018ஆம் ஆண்டு என்ன நடந்தது?

இப்படிப்பட்ட திருச்சி விமான நிலையத்தில், 2018ஆம் ஆண்டு திருச்சியில் இருந்து 136 பயணிகளுடன் துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், மிகத் தாழ்வாக பறந்தது. இதனால், விமானத்தின் சக்கரம், சாலை ஓரம் உள்ள விமான நிலைய சுற்றுச் சுவரை தட்டி இடித்துச் சென்றது. இதில் விமான தொலைத்தொடர்பு ஆண்டெனா, ஓடுதளத்தில் இருந்த மின் விளக்குகள் சேதமடைந்தன. ஆனால் விமானம் பறப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை என விமானி கூறியதால், தொடர்ந்து பறப்பதற்கு அனுமதிக்கப்பட்டது.

ஆனால், சுவற்றில் ஏற்பட்ட 10 அடிக்கும் அதிகமான சேதத்தை பார்த்த விமான நிலைய அதிகாரிகள், விமானத்தை மீண்டும் தரையிறக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்குள் மும்பையை தாண்டிய விமானம், மீண்டும் அங்கு வரவழைக்கப்பட்டு, அதிகாலை 5.47 மணிக்கு பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

2018 ஆம் ஆண்டில்

மும்பை விமான நிலையத்தில் இறங்கிய விமானத்தை பரிசோதித்தபோது, அதன் அடிப்பகுதி பெரிய அளவில் சேதமாகி இருந்தது. சக்கரங்கள் அருகே முள்வேலி கம்பிகளின் ஒருபகுதி இருந்ததும் தெரியவந்தது.

2018ஆம் ஆண்டு சிப்பந்திகளுடன் சேர்த்து 136 பேரும், தற்போது 144 பயணிகளும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் மேலே பறந்து, மீண்டும் தரையிறக்கப்பட்டு உயிர் பிழைத்திருக்கிறார்கள். தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போய்விட்டது என்ற கூற்றைப்போல், திருச்சி விமான நிலைய அசம்பாவிதங்கள் நல்வாய்ப்பாக கழிந்திருக்கின்றன... இனியும் இதுபோன்ற பிரச்னைகள் வரக்கூடாது என்பதே அனைவரின் விருப்பம்...!