தமிழ்நாடு

தமிழ்நாட்டில் கலங்கரை விளக்கங்களை மேம்படுத்துக: மாநிலங்களவையில் வாசன் கோரிக்கை

தமிழ்நாட்டில் கலங்கரை விளக்கங்களை மேம்படுத்துக: மாநிலங்களவையில் வாசன் கோரிக்கை

Veeramani

தமிழ்நாட்டில் உள்ள கலங்கரை விளக்கங்களை மேம்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் இன்று மாநிலங்களவையில் வலியுறுத்தினார். பிரபல சுற்றுலா தலமான மகாபலிபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கலங்கரை விளக்கங்களை செம்மைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று அறிமுகப்படுத்தப்பட்ட கடற்பயண வழிகாட்டு உபகரணங்கள் மசோதா குறித்து பேசிய ஜி.கே வாசன், "தமிழ்நாட்டில் மூன்று துறைமுகங்கள் மற்றும் பல கலங்கரை விளக்கங்கள் உள்ளன. இந்த துறைமுகங்கள் மற்றும் கலங்கரை விளக்கங்களை மேம்படுத்தி அதன்மூலம் மீனவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்" என்றார்.

எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பி வந்த நிலையில் பேசிய வாசன், இந்த மசோதாவை ஆதரிப்பதாக தெரிவித்தார். "நவீன தொழில்நுட்பத்துடன் கலங்கரை விளக்கம் மேம்படுத்தும் திட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதன் மூலம் மீனவர்களுக்கு பலன் கிடைக்க வேண்டும். தமிழகத்தில் மீன்பிடி தொழில் முக்கிய வாழ்வாதாரமாக இருப்பதால், மத்திய அரசு இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி உட்கட்டமைப்பு வசதிகளை செம்மைப்படுத்தி கொடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்

முன்னதாக, மாநிலங்களவையில் The Marine Aids to Navigation Bill மசோதா அமளிக்கிடையே தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் இந்த மசோதாவை அறிமுகம் செய்து வைத்தார். தமிழ் காவியமான சிலப்பதிகாரத்தில் காவிரி பூம்பட்டினம் துறைமுகத்தில் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது என ஜி.கே வாசன் மாநிலங்களவையில் பேசினார். "தமிழ்நாட்டில் உள்ள கலங்கரை விளக்கங்களை மேம்படுத்தி பராமரிக்க வேண்டும். கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு வழிகாட்ட நவீன தொழில்நுட்பத்துடன் சிறப்பான கருவிகள் மற்றும் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்" என்றார் ஜி.கே.வாசன்.

தொடர் முழக்கங்களை எதிர்க்கட்சியினர் எழுப்பி வந்ததால், மசோதா மீதான விவாதம் பின்னர் தொடரும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். இன்று இந்த மசோதா ஒன்று மட்டுமே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- கணபதி சுப்ரமணியம்