கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அதன்படி, மேல்முறையீடு மற்றும் புதிதாக விண்ணப்பித்துள்ள 11 லட்சத்து 85 ஆயிரம் பேரின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன.
அதன்படி, இரண்டாம் கட்ட மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் மேல்முறையீடு செய்தவர்களுக்கு மகளிர் உரிமை தொகையான ஆயிரம் ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் பணி தொடங்கியது. தீபாவளி பண்டிகை 12ஆம் தேதி வருவதால், பயனாளர்களின் நலனை கருத்தில் கொண்டு முன்கூட்டியே உரிமை தொகை விநியோகம் செய்யப்படுகிறது.