தமிழ்நாடு

இறக்குமதி மணல் வழக்கு: அரசு தரப்பு கோரிக்கையை நிராகரித்த நீதிபதி!

இறக்குமதி மணல் வழக்கு: அரசு தரப்பு கோரிக்கையை நிராகரித்த நீதிபதி!

webteam

இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனை தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கினை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலைச் சேர்ந்த எம்.ஆர்.எம் ராமையா எண்டர்பிரைசஸ் நிர்வாக இயக்குநர் ராமையா, உயர்நிதிமன்ற மதுரைக்கிளையில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். அதில், “மலேசியாவில் இருந்து 53,334 மெட்ரிக் டன் மணலை இறக்குமதி செய்து  தூத்துக்குடி உள்ள புதிய துறைமுகத்தில் வைத்துள்ளோம். அதற்கான ஜிஎஸ்டி உள்பட ரூ.38,39,347 தொகையை வரியாக செலுத்தியுள்ளோம். இருப்பினும், 96 டன் மணலை வாடிக்கையாளருக்கு கொடுப்பதற்கு கொண்டு எங்கள் 6 லாரிகளை கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் தமிழக கனிம வள சட்டப்படி தனியார் மணல் விற்பனை செய்ய முறையான அனுமதி பெற வேண்டும் எனக் கூறுகின்றனர். மணலை துறைமுகத்திலிருந்து வெளியே கொண்டு செல்லவும் அனுமதி மறுத்துள்ளனர்” என்று கூறியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, கடந்த நவம்பர் 29 இல் விதிகளுக்கு உட்பட்டு மணலை விற்பனை செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டது. அத்துடன் தமிழகத்தில் உள்ள மணல் அனைத்து மணல் குவாரிகளையும் மூடவும், இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனை குறித்து உரிய விதிகளை வகுக்கவும் அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் ராமையா தரப்பில் மற்றொரு மனு வழங்கப்பட்டது. அதில், “கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 242 இல் இறக்குமதி செய்யப்படும் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து  கொணரப்படும் மணலை சேமித்து வைப்பது, போக்குவரத்து மற்றும் விற்பனை ஆகியவற்றை பொதுப் பணித்துறையே நிர்வகிக்கும், முடிவெடுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனையை பொதுப்பணித்துறையே மேற்கொள்ளும் என்பது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, இந்த அரசாணையை ரத்து செய்து, இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனை செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது. 

இதை இன்று நீதிபதி சுவாமிநாதன் விசாரித்த போது, ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர், இதே கோரிக்கையை முன்னிறுத்திய வழக்கு சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார். எனவே இந்த வழக்கையும் அங்கு மாற்றுமாறு கோரினார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, இது குறித்து பதிவுத்துறையிடம் முறையிடுமாறு கூறி வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.