உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, நீட் தேர்வு pt web
தமிழ்நாடு

நீட் தேர்வு மோசடி| “தாலியை கூட கழட்ட சொல்லி சோதனை செய்தீர்களே?” NTA-வை வெளுத்து வாங்கிய நீதிபதிகள்!

PT WEB

செய்தியாளர்: இ.சகாய பிரதீபா

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தேர்ச்சி பெற்று சென்னையை சேர்ந்த மாணவர்கள் தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது. பின்னர் விசாரணையின் போது பல்வேறு மாணவர்கள் இதுபோல ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது தெரிய வந்தது.

Neet | Neetexam2023 | NEETUG2023

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 27 ஆவது குற்றவாளியாக உள்ள தருண்மோகன் வழக்கிலிருந்து, தன்னை விடுவிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில், “நீட் தேர்வு மோசடி வழக்கில் தேசிய தேர்வு முகமை இதுவரை எந்த தகவலையும் தரவில்லை. இதனால் வழக்கு விசாரணை மெதுவாகவே உள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

(நீட்) தேசிய தேர்வு முகமை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார். அதற்கு நீதிபதி, “வழக்கு பதிவு செய்து 5 ஆண்டுகள் ஆகிறது. இந்தியாவிலேயே இல்லாத மாணவன் ஒருவனுக்கு, மூன்று மாநிலங்களில் தேர்வு எழுதப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் திருமணமான மாணவிகளின் தாலியை கூட கழட்ட சொல்லி சோதனை செய்கிறீர்கள்.

சிபிசிஐடி கேட்ட ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்களின் ஆவணங்களை இதுவரை தேர்வு நடத்தும் முகமை வழங்கவில்லை. இது தேர்வு முகமை குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்படுகிறார்களோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. நீட் தேர்வு முறைகேட்டில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் ஏன் சோதனை செய்ய நடத்த உத்தரவு பிறப்பிக்க கூடாது?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, “இந்த நிலை தொடர்ந்தால் அவர்களை கைது செய்யவும் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்” என எச்சரித்தார்.

மத்திய அரசு தரப்பில் இறுதியாக திங்கள்கிழமை அறிக்கை தாக்கல் செய்வதாக கால அவகாசம் கோரியதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.