தமிழ்நாடு

“எங்களுக்கு இங்கிலீஷ் டீச்சர் வேண்டும்” - சாலைமறியலில் குதித்த அரசுப்பள்ளி மாணவர்கள்!

“எங்களுக்கு இங்கிலீஷ் டீச்சர் வேண்டும்” - சாலைமறியலில் குதித்த அரசுப்பள்ளி மாணவர்கள்!

kaleelrahman

செஞ்சி அருகே ஆங்கில ஆசிரியர் வேண்டி அரசுப் பள்ளி மாணவர்கள் பெற்றோருடன் இணைந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நெகனூர் புதூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 56 மாணவர்கள் 54 மாணவிகள் என மொத்தம் 100 பேர் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 4 ஆசிரியர்கள் தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பள்ளியில் பணியாற்றிய ஆங்கில ஆசிரியர் குமார் என்பவர் மாற்றப்பட்ட நிலையில், மாற்று ஆசிரியர் யாரும் பணியமர்தப்படவில்லை. இதனால் கடந்த ஒரு வருடமாக ஆசிரியர் இல்லாததால் ஆங்கில பாடங்களை கற்பதில் மாணவர்கள் சிரமப்பட்டனர். இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைகளுடன் இணைந்து பள்ளி நுழைவாயில் மூடி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த செஞ்சி மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், செஞ்சி வட்டாட்சியர் பழனி மற்றும் வளத்தி காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத பெற்றோர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களுடன் தொலைபேசியில் அடுத்த 20 நாட்களில் இப்பள்ளிக்கு நிரந்தரமாக ஆங்கில ஆசிரியர் ஒருவரை பணியில் நியமிப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.