வானிலை ஆய்வு மைய தெற்கு மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் pt web
தமிழ்நாடு

சென்னைக்கு ரெட் அலர்ட் ஏன்? மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா இல்லையா?-வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்

"ரெட் அலர்ட் ஏன் கொடுத்துள்ளோம் என்றால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் கடலில் இருக்கிறது" - வானிலை ஆய்வு மைய தெற்கு மண்டல இயக்குநர் பாலச்சந்திரன்

PT WEB

வங்கக் கடலில் உருவாகி இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. விடாத பெய்த மழையாக பல இடங்களில் நீர் தேங்கியது. இன்றும் கனமழை இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் மட்டுமே காணப்படுகிறது. மழை பெரிதாக பெய்யவே இல்லை. இருப்பினும், இன்றிரவு மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவே வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், இன்னும் சில இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களிலும் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரியிலும் நாளை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

வானிலை ஆய்வு மைய தெற்கு மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வடகிழக்கு பருவமழையைப் பொருத்தவரை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் கடந்த 1 முதல் இன்று வரையிலான காலக்கட்டத்தில் பதிவான மழையின் அளவு 138 மிமீ. இந்தக் காலக்கட்டத்தில் இயல்பு அளவு 71 மிமீ.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 280 கிமீ தொலைவிலும், புதுவைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 320 கிமீ தொலைவிலும், ஆந்திர பிரதேசம் நெல்லூருக்கு கிழக்கு தென் கிழக்கே சுமார் 370 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 15 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை சென்னைக்கு அருகே கரையை கடக்கும்.

சென்னைக்கு ரெட் அலர்ட் ஏன்? - விளக்கம்

இதன்காரணமாக அடுத்த 4 தினங்களுக்கு தமிழ்நாடு, புதுவை காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் என 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூரில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும்.

புயலாக மாற பல கட்டங்கள் உள்ளன: வானிலை ஆய்வு மைய தெற்கு மண்டல இயக்குநர் பாலச்சந்திரன்

ரெட் அலர்ட் ஏன் கொடுத்துள்ளோம் என்றால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் கடலில் இருக்கிறது. நாளை காலை கரைக்கு அருகில் வரும்போது மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதைக் கருத்தில்கொண்டு ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதன் காரணமாக ரெட் அலர்ட் கொடுத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.