கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் PT
தமிழ்நாடு

13 உயிர்கள் பலி; கண்ணீரில் மக்கள்! கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை!

கள்ளச்சாராய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆட்சியர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் இந்த விவகாரத்தை சிபிசிஐடி வசம் ஒப்படைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்கள் மோகன்ராஜ், பாலாஜி

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் 13 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நிலைமை மோசமாகியுள்ள சூழலில், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், எ.வ. வேலு ஆகியோர் அங்கு விரைந்துள்ளனர். தமிழக அரசும் கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

கண்ணீரில் பலியானோரின் குடும்பத்தினர்!

கதறி அழும் இந்த பெண்மணிக்கு ஆறுதல் கூறக்கூட முடியாது. இது தேறுதல் சொல்லமுடியாத அளவுக்கான இழப்பின் வலி.. இவரைப்போலத்தான் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 40க்கும் அதிகமானோரின் உறவினர்கள் கண்ணீரும், கதறலும் பரிதவிப்புமாக பதறிக் கொண்டிருக்கிறார்கள்.

கள்ளக்குறிச்சியில் எளிதாக கிடைக்கும் கள்ளச்சாராயம்தான் இதற்கு காரணம் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் செவ்வாய்கிழமை இரவு மற்றும் புதன்கிழமை காலையில் 3 பேர் கண் எரிச்சல், வயிற்று எரிச்சல், வாந்தி மயக்கத்துடன் மருத்துவமனைக்கு சென்றனர். இவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். மணிகண்டன் என்பவர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதேபகுதியில் இருந்து 40க்கும் அதிகமானோர் இதே அறிகுறிகளுடன் மருத்துவமனையில் குவிந்த வண்ணம்இருந்தனர். கைக்குழந்தையுடன் பரிதவிக்கும் இளம்பெண்கள், கண்ணீருடன் கதறும் தாய்மார்கள் என மருத்துவமனை வளாகமே சோகமயமாக காட்சியளிக்கிறது. மகன், தந்தை, தாத்தா என பலதரப்பட்டவயதுடைய ஆண்களும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால், உறவினர்கள் அங்கு கூடினர்.

ஆட்சியர் ஷ்ரவன்குமார் சொன்னதும்.. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏவின் மறுப்பும்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சென்று பார்த்த மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார், கள்ளச்சாராயத்தால் மரணம் என்பது உறுதிபடுத்தப்படவில்லை என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இதனை மறுக்கும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார், கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தின் பின்புறமே கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக புகார் கூறுகிறார். மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு 10 பேரும், சேலம் மருத்துவமனைக்கு 4 பேரும் அனுப்பப் பட்டுள்ளனர்.

கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு உறுதி செய்யப்படவில்லை என்று ஆட்சியர் கூறினாலும், சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவி விஜயா, உறவினர் தாமோதரன் ஆகியோரும் காவல்துறையின் விசாரணை வளையத்தில் உள்ளனர்.

ஆட்சியர் மாற்றம், எஸ்.பி சஸ்பெண்ட் - தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

கள்ளச்சாராய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆட்சியர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் இந்த விவகாரத்தை சிபிசிஐடி வசம் ஒப்படைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.