தமிழ்நாடு

பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: தயாநிதிமாறன் நீதிமன்றத்தில் ஆஜர்

பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: தயாநிதிமாறன் நீதிமன்றத்தில் ஆஜர்

webteam

பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார்.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த போது பிஎஸ்என்எல் இணைப்பை முறைகேடாக பயன்படுத்தியாக தயாநிதிமாறன் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள சிபிஐ, முறைகேட்டினால் ஒரு கோடியே 78 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. இந்த வழக்கு சிபிஐ நீதிபதி நடராஜன் முன் விசாரணைக்கு வந்தபோது, தயாநிதிமாறன் உள்பட குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் ஆஜராகினர். கலாநிதிமாறன் உள்ளிட்ட 3 பேர், வழக்கில் இன்று ஆஜராவதில் இருந்து விலக்களிக்கக் கோரி மனு தாக்கல் செய்தனர். அதேவேளையில் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி கவுதமன், ரவி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளதை குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.

மீதமுள்ளவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு தாக்கல் செய்யவுள்ளதால் அதுதொடர்பாக முடிவெடுக்கும் வரை குற்றச்சாட்டு பதிவு செய்யக் கூடாது எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதைக் கேட்ட நீதிபதி, சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு வரும் 23-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.