தமிழ்நாடு

சட்டவிரோத கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் மீது லாரி ஏற்றிக் கொலையா?.. பகீர் புகார்

சட்டவிரோத கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் மீது லாரி ஏற்றிக் கொலையா?.. பகீர் புகார்

webteam

கரூரில் சட்ட விரோதமாக இயங்கும் கல்குவாரிகளை மூட வலியுறுத்தி போராடியவர் மீது லாரி ஏற்றிக் கொல்லப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது தோட்டத்திற்கு அருகில் உள்ள கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார் என்பவருக்கும் ஜெகநாதனுக்கும் நிலப் பிரச்னை தொடர்பாக தகராறு இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார் தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாக பரமத்தி காவல் நிலையத்தில் ஜெகநாதன் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், செல்வகுமார் நடத்தி வரும் கல்குவாரி உரிமம் முடிந்து விட்டதாகவும் சட்ட விரோதமாக செல்வகுமார் நடத்தி வரும் குவாரியை மூட வலியுறுத்தி ஜெகநாதன் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் உள்ளிட்டோருடன் இணைந்து கனிம வளத் துறைக்கு பல்வேறு புகார் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று மாலை தனது வீட்டிலிருந்து காருடையாம்பாளையம் என்ற இடத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஜெகநாதன் மீது அந்த வழியாகச் சென்ற கல்குவாரி லாரி ஒன்று மோதியுள்ளது. இதில், பலத்த காயமுற்ற ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த க.பரமத்தி காவல் நிலைய போலீசார், ஜெகநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ஜெகநாதன் மீது மோதிய லாரி செல்வ குமாருக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், கரூரில் சட்ட விரோதமாக இயங்கும் கல் குவாரிகளை எதிர்த்து போராடிய ஜெகநாதனை கல் குவாரி உரிமையாளர் லாரி ஏற்றிக் கொலை செய்து விட்டதாக சமூக ஆர்வலர்கள் கண்டித்து வருகின்றனர். எஇது குறித்து க.பரமத்தி காவல் நிலைய போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.