பெரம்பலூர் அருகே பென்னகோணம் கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவது புதிய தலைமுறையின் களஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
பெரம்பலூர் அருகே பென்னகோணம் கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்ததின் பேரில் புதிய தலைமுறை கள ஆய்வு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சட்டவிரோத மதுவிற்பனை நடைபெற்று வருவது உறுதியானது. இது குறித்த காட்சிகளை புதிய தலைமுறை குழுவினர் வீடியோவாக பதிவு செய்தனர். இதனிடையே பென்னகோணம் கிராமத்தில் கரிகாலன் என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாகவே சட்ட விரோதமாக அரசு மதுபானங்களை தன் வீட்டில் வைத்து விற்பனை செய்து வருவதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
பென்னகோணம் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் அரசு மதுபானக் கடை இல்லாத நிலையில், ஒரு வீட்டில் இரவு பகலாக பல வகையான மதுக்கள் எளிமையாக கிடைப்பதால் மது விற்பனை படு ஜோராக நடைப்பெற்று வருகின்றது. மது விற்பனை கூடத்தில் சிறுவர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரங்களில் அரசு மதுபான வாகனத்தின் மூலமாகவே மது இறக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து மது ஒழிப்பு பிரிவு காவலர்களோ, அரசு மதுபான மாவட்ட மேலாளரோ கண்டு கொள்வதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.