சென்னையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னையில் பொதுமுடக்கத்தால் மதுக்கடைகள் திறக்கப்படாததால் சட்டவிரோத மதுவிற்பனை, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக காவல்துறைக்கு தெரியவந்தது. இதனால் சென்னையில் போதைப்பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் தலைமையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பல்லவன் சாலையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை கைது செய்தனர்.
58 வயது நிரம்பிய அப்பெண்ணின் பெயர் காஞ்சான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அப்பெண்ணிடம் இருந்து 105 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.