தமிழ்நாடு

கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் ரோபோட்டிக் இயந்திரம்.. அசத்திய ஐஐடி மாணவர்கள்!

கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் ரோபோட்டிக் இயந்திரம்.. அசத்திய ஐஐடி மாணவர்கள்!

நிவேதா ஜெகராஜா

கழிவு நீர் தொட்டிகளை மனிதத் தலையீடு இன்றி தானியங்கி பயன்படுத்தி தூய்மைப்படுத்துவதற்கான ரோபோட்டிக் இயந்திரத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். தமிழ்நாட்டில் 10 இடங்களில் பயன்பாட்டிற்கு வரவுள்ள இந்த ரோபோக்களை தூய்மை பணியாளர்களே இயக்குவதற்கான பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.

பாதாள சாக்கடை சுத்தப்படுத்துவதற்கு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் இந்தியாவிலேயே முதல்முறையாக கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்துவதற்கான இயந்திரமாக ஆராய்ச்சி மாணவர்கள் கண்டறிந்துள்ளனர். எதிர்க்காலத்தில் தூய்மைப் பணியாளர்களின் உற்ற தோழனாக இந்த இயந்திரம் செயல்படுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கடந்த வருடத்தில் கழிவுநீர் தொட்டி கழுவும் போது விஷவாயு தாக்கி இறந்த தூய்மைப் பணியாளர்கள் எண்ணிக்கை மட்டும் 941. அதிக தூய்மைப் பணியாளர்கள் இறக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருந்து வரும் நிலையில் இந்த எண்ணிக்கை வருடாவருடம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னை ஐஐடியின் பேராசிரியர் பிரபு ராஜகோபால் தலைமையில் ஐஐடி ஆதரவுடன் இயங்கி வரும் சொலினாய்ட் இன்டெகிரிட்டி நிறுவனம் இணைந்து மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை ஒழிக்கும் நோக்கில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் இயந்திரத்தை கண்டறிந்துள்ளனர்.

ஹோமோசெப் (HomoSEP) என பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திரத்தில் கழிவுநீர் தொட்டியில் நீள அகலத்திற்கு ஏற்றவாறு இயந்திரத்தைப் பயன்படுத்தவும், கருவிகளை இயக்கவும் முடிகிறது. பொதுவாக கழிவு நீர் தொட்டிகளில் மாதக்கணக்கில் கழிவு நீர் சேரும் போது அவை திடத்தன்மையுடன் மாறத் தொடங்குகிறது. அதை உடைத்து எடுக்கும் போது பெரும்பாலும் விஷவாயு வெளியேறி மனித இறப்புகள் ஏற்படும் நிலையில், இந்த இயந்திரத்தில் மூலம் முதலில் கழிவுநீர் தொட்டியில் உள்ள திடப்பொருட்கள் திரவமாக மாற்றம் செய்யப்படுகின்றன. திரவக் கழிவாக மாற்றம் அடைந்தவுடன் கழிவு நீர் உறிஞ்சப்பட்டு தொட்டி சுத்தம் செய்யப்படுகிறது.

மேலும் ஹோமோசெப் கருவியை இயக்குவதற்கான பயிற்சி, தூய்மைப் பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டு அதன் மூலம் அவர்களுக்கு பொருளாதாரத்தை ஈட்டித்தருவது இந்த திட்டத்தின் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்த தானியங்கி கழிவுநீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை பயன்படுத்துவதற்கு எளிமையாகவும், பயன்பாட்டிற்கு தக்க வகையில் மாற்றி வடிவமைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பது இதன் தனிச் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பாதுகாப்பாக இயக்கவும் எளிமையாக பல்வேறு வடிவங்களில் மாற்றவும் முடியும் என தெரிவிக்கிறார்கள். இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் முதல் டிராக்டர் லாரி வரையில் இதை ஏற்றி செல்லலாம் கூறப்படுகிறது.

தாம்பரம் மாநகராட்சியில் பயன்பாட்டிற்காக தானியங்கி கழிவு இயந்திரங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் இதேபோல தமிழகத்தில் 10 இடங்களில் தானியங்கி கருவி சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்க முடிவு செய்துள்ளதாக ஐஐடி குழுவினர் தெரிவிக்கின்றனர். மேலும் இயந்திரத்தை இயக்குவதற்கான பயிற்சி தொடர்ச்சியாக தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் அடுத்த சில மாதங்களில் இவை தமிழகத்தின் சில உள்ளாட்சி அமைப்புகளில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக ஐஐடி குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இந்திய தயாரிப்பு, இயந்திரத்தில் பாதுகாப்பு அதன் மூலம் தூய்மை பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு... அறிவியல் தொழில் நுட்பம் மூலம் சமூக அறத்தை நிலைநாட்டும் இந்த இயந்திரத்தை அனைத்து இடங்களிலும் பயன்படுத்த அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் என்பதுதான் மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளது.

- ந.பால வெற்றிவேல்