தமிழ்நாடு

மாட்டுக்கறி விருந்து நடத்துவதா..? சென்னை ஐஐடி மாணவரை தாக்கிய கும்பல்

webteam

சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டுக்கறி விருந்துக்கு ஏற்பாடு செய்த மாணவர் சூரஜ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இறைச்சிக்காக மாடுகள் விற்பதைத் தடை செய்து மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன. சென்னை ஐஐடி வளாகத்தில் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக அம்பேத்கார் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் மாட்டுக்கறி உண்ணும் விழாவுக்கு ஏற்பாடு செய்தனர். சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த இந்த விழாவில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டதாக தெரிகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான முனைவர் பட்ட மாணவர் சூரஜை, மற்றொரு மாணவர் அமைப்பினைச் சேர்ந்த 6 பேர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஐஐடி டீனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக சூரஜின் நண்பர் அபினவ் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறையிடம் தொலைபேசி வழியாக பேசிய அபினவ், காயமடைந்த சூரஜ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.