தமிழ்நாடு

'இந்துக்களுக்கு எதிராக பேசுவதாக அவதூறு பரப்புகிறார்கள்' - திருமாவளவன் பேச்சு

'இந்துக்களுக்கு எதிராக பேசுவதாக அவதூறு பரப்புகிறார்கள்' - திருமாவளவன் பேச்சு

webteam

''சங் பரிவார் பேசும் அரசியலை எதிர்த்தால் நாம் ஏதோ இந்துக்களுக்கு எதிராக பேசுவதாக அவதூறு பரப்புகிறார்கள்'' என்கிறார் திருமாவளவன்.

திமுகவின் தலைவராக மு.க. ஸ்டாலின் இரண்டாம் முறை பொறுப்பேற்றதை கொண்டாடும் பொதுக்கூட்டம் கொரட்டூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர் பாபு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்,  மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா,  திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், ''2016ல் நாங்கள் ஏதோ திமுகவிற்கு எதிராக சதி செய்வதற்காக நாங்கள் தனித்து நிற்கவில்லை. பொதுமேடையில் சொல்கிறேன். நாங்கள் அவ்வாறு சென்றதற்கான காரணம் ஸ்டாலின். 2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த உடனேயே எங்களை அழைத்து நாங்கள் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிடப் போகிறோம். வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக. இனி நீங்கள் முடிவு செய்துகொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். அதனால் தான் நாங்கள் தனி கூட்டணி அமைத்துப் போயிட்டோம்.

சனாதனக் கும்பலின் இலக்கே திமுகவை அழிக்க வேண்டும் என்பது தான். அதற்கு  ஒருபோதும் இடம் தரக் கூடாது. நாம் இந்துக்களுக்கு  எதிரி அல்ல. சங் பரிவார் பேசும் அரசியலை எதிர்த்தால் நாம் ஏதோ இந்துக்களுக்கு எதிராக பேசுவதாக அவதூறு பரப்புகிறார்கள். இந்துச் சமூகம் மிகப்பெரிய சமூகம். இந்துக்கள் தான் நம் கட்சிகளில் நிறைந்திருக்கிறார்கள். மத வெறியின் மூலம் மக்களை பிரித்து அழிக்க நினைக்கிற நாசக்கார அரசியல் சங் பரிவாருடையது. இந்தியாவில் நடந்த வெடிகுண்டு வெடிப்புகளில் 18 குண்டுவெடிப்புகளில் நேரடித் தொடர்பு கொண்டது சங்கப்பரிவாரம். பாசிசம் தான் ஆர்எஸ்எஸி-இன் கொள்கை'' என்றார்

அவரைத் தொடர்ந்து நாஞ்சில் சம்பத் பேசுகையில் , ''அம்பேத்கர் பெயரில் அறக்கட்டளை தொடங்குவேன், அம்மா வங்கி அட்டை தருவேன், குடும்ப அட்டை அனைத்திற்கும்  இலவச செல்போன், 2 துணைக்கோள் நகரங்கள், மோனோ ரயில்  என நீங்கள் அறிவித்த 100க்கும் மேற்பட்ட திட்டங்களை நிறைவேற்றவே இல்லையே  எடப்பாடி பழனிச்சாமி. இப்போது  இடைக்கால பொதுச்செயலாளர் பின்னாளில் முதலமைச்சர் என கனவு காணும் எடப்பாடி சிறைக்குச் செல்வது உறுதி.

உலகெங்கும் கச்சா எண்ணை விலை குறைந்தாலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் டீசல் விலை குறையாது. இதில் அடித்த கொள்ளை மட்டும் 29 லட்சம் கோடி. அதானி,  அம்பானி கும்பலுக்கு மட்டும் 12 லட்சம் கோடி கடன்  தள்ளுபடி - இதற்காகவா நரேந்திர மோடிக்கு வாக்களிக்க வேண்டும்? அம்பானியின் கையில் டெலிகாம்,  அதானியின் கையில் துறைமுகம், டாடாவின் கையில் ஏர்போர்ட் அரசின் கையில் ராமர் கோயில் இதனால் மக்களின் கையில் திருவோடு'' என்றார்.

இதையும் படிக்க: பரந்தூர் விமான நிலையம்: அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் - திருமாவளவன் வேண்டுகோள்