சென்னையில் தெருக்களில் கழிவுநீரை வெளியேற்றினால் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் தொற்றுநோய் குறித்து விரிவான அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்ட முன்வடிவு ஒன்றை தாக்கல் செய்தார். சென்னையில், குடியிருப்பு வாசிகள் தெருக்களில் கழிவு நீரை வெளியேற்றுவதை தடுக்க இந்த சட்டமுன் வடிவு வகை செய்கிறது. சட்டமுன்வடிவின்படி, குடியிருப்பு வாசிகள் தெருக்களில் கழிவு நீரை வெளியேற்றினால் 5 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களாக இருந்தால் 10 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பேரவையில் பன்றிக்காய்ச்சல் தொடர்பாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் தொற்று நோய் குறித்து விசாரித்து விரிவான அறிக்கை பெற்று அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.