போக்குவரத்து தொழிலாளர்கள் நாளைக்குள் பணிக்குத் திரும்பினால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இதனிடையே, சென்னை சிந்தாதரிப்பேட்டையில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் இன்று நடைபெற்ற போக்குவரத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக்கூட்டத்தில், போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அனைத்து கோட்ட தலைமை அலுவலகம் முன் நாளை மாலை குடும்பத்துடன் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு கௌரவம் பார்ப்பதாக தொழிற்சங்கள் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் நாளைக்குள் பணிக்குத் திரும்பினால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும், வேலை நிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்களிடம் விளக்கம் கேட்டு போக்குவரத்து துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக அவர் கூறினார். பேருந்தை பாதியில் நிறுத்திவிட்டு சென்றவர்கள் , பஸ் கண்ணாடிகளை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.