தமிழ்நாடு

திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மத்திய அரசு தீர்வை காணும் - சி.பி.ராதாகிருஷ்ணன்

திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மத்திய அரசு தீர்வை காணும் - சி.பி.ராதாகிருஷ்ணன்

webteam

தீவிரவாதத்தை திமுக அரசு தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மத்திய அரசு தீர்வை காணும்; கோட்டையில் உள்ளவர்கள் கண்காணிக்கத் தவறிய நேரத்தில் கோட்டை ஈஸ்வரன்தான் காப்பாற்றினார் என சிபி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பூர் வித்யாலயம் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "கோட்டையில் உள்ளவர்கள் தீவிரவாதிகளின் செயல்களை கண்காணிக்க தவறிய நேரத்தில் கோட்டை ஈஸ்வரன்தான் மக்களை தீபாவளி சமயத்தில் காப்பாற்றி உள்ளார்.

டிஜிபி உடனே வருகிறார். அது பாராட்டுக்குரியது. மிகச்சிறந்த அதிகாரிகளை திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் நியமித்தார்கள். தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து யார்டு காவல் துறைக்கு இணையானது என்பதில் ஐயமில்லை. ஆனால், ஸ்காட்லாந்து யார்டு போலீசார் இங்கு வந்தாலும் இவர்களுக்கு அடிபணிந்து தான் இருக்கும் நிலை உள்ளது. தமிழக அரசு தீவிரவாத செயல்களை மூடி மறைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசின் நடவடிக்கையால் காஷ்மீரில் பெரும் பகுதி அமைதி பூங்காவாக மாறியுள்ளது. தமிழகத்தில் மிக தீவிர நடவடிக்கைகள் எடுத்தால்தான் தீவிரவாதத்தை தடுக்க முடியும். தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கு பதிலாக மூடி மறைக்கும் வேலையை செய்து வருகின்றனர். இது திவிரவாதிகளின் ஆக்கத்திற்கும் ஊக்கத்திற்கும் வித்திடுகிறது. இந்த போக்கால் திமுக முற்றிலும் அழிந்துவிடும் என்பதை திமுக தலைவர், முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும்.

எடுப்பார் கைப்பிள்ளையாக காவல்துறை இருக்கக் கூடாது. ஒளிவு மறைவு இல்லாமல் கைப்பற்றப்பட்ட வெடி மருத்துகளை மக்கள் பார்வைக்கு கொண்டு வந்து தீவிரவாதத்தை அடக்கி ஒடுக்கினால் தான் தமிழகம் அமைதி பூங்காவாக விளங்க வழி. எவ்வளவு வெடி மருத்துகளை கைப்பற்றினோம் என சொல்லாமல் மறைத்து வருகின்றனர். அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்து விசாரணை நடைபெற வேண்டும்.

கோவையை குறிவைத்து நடக்கும் தாக்குதல்கள் இரண்டாவது பெரிய தொழில் நகரத்தை சீர்குலைத்தால் தமிழகத்தின் பொருளாதாரம் நிலைகுலையும் என நடத்தப்படுகிறது. தமிழக அரசு முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இந்த சூழலை கண்காணித்து வருகிறது. முறையான நடவடிக்கை எடுக்கத் தவறினால் மத்திய அரசு தலையிடும் சூழல் ஏறபடும். பின்னர் மாநில சுயாட்சி என்ற பெயரில் தீவிரவாதத்தை ஊக்குவிப்பது போல அமையக்கூடாது.

தமிழக உளவுத்துறை கண்காணித்து இருந்தால் இதனை முளையிலேயே கிள்ளி எரிந்து இருக்கலாம். தமிழகத்தில் சாதகமான ஆட்சி உள்ளது என தீவிரவாதிகள் செயல்பட்டு வருகிறார்கள். அவ்வாறு இல்லை என தமிழக அரசு நிரூபிக்கும் கட்டாயத்தில் உள்ளது. டிஜிபி முதலில் ஒன்றை சொன்னார். பின்னர் சிறிய சிறிய வெடிகுண்டுகளை தயாரிப்பதில் ஈடுபட்டார்கள் என சொல்கிறார். ஏன் வெடிமருந்து அளவை வெளியிடுவதில் தயக்கம். 1.5 டன் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக அரசியல் இயக்கமாக வெற்றிகரமாக இயங்க தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும். வரலாற்று தவறுகளை திருத்திக் கொள்ளாமல் உள்ள கட்சி திமுக என தெரிவித்தார் .