தமிழ்நாடு

”மதுபான கடைகளால்தான் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அதிகரித்துள்ளது” -ஹெச்.ராஜா

”மதுபான கடைகளால்தான் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அதிகரித்துள்ளது” -ஹெச்.ராஜா

webteam

தமிழகத்தில் மதுக்கடைகளை அதிகமாக திறப்பதால் ஆண்கள் மத்தியில் மலட்டுத்தன்மை அதிகரித்து, அதனால் குழந்தையின்மை பிரச்னை அதிகரித்து, தமிழகத்தில் செயற்கை கருத்தரிப்பு மையம் அதிகமாக திறக்கப்பட்டு வருவதாக திண்டுக்கல்லில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியுள்ளார்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள சில்வார்பட்டி பகுதியில் புதிதாக அரசு மதுபான கடை திறந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 17.10.21 பாரதிய ஜனதா கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்து அருகே உள்ள ரெட்டியார்சத்திரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். கைது செய்யப்பட்டவர்களை பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா நேரில் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “30 ஆண்டுகளுக்கு முன்பு ‘இரண்டு குழந்தைகள் போதும் - குடும்பக்கட்டுப்பாடு பண்ணுங்க’ என்று ஊர் முழுவதும் போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த போர்டு இருந்த இடங்களிலெல்லாம் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் இருக்கிறது. தமிழன், தமிழ் என்ற பெயரில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வரும் 1969 ஆண்டுக்கு முன்புவரை தமிழகத்தில் மதுபானம் கிடையாது. கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகுதான் மதுபானக்கடையும், சாராயக்கடையும் வந்தது.

இந்தக் கடைகளினால் இன்றைக்கு தமிழன் இன்று இயற்கையாக தன் மனைவிக்கே குழந்தை பெற்றுத்தர முடியாத நிலைமைக்கு வந்துவிட்டான். இதனால் தான் தமிழகத்தின் எல்லா மூலைகளிலும் செயற்கை கருத்தரிப்பு மையம் அதிகரித்துள்ளது. கருத்தரிக்கக்கூட, வேற யாரோ உதவும்படியான சூழ்நிலையை உருவாக்கிய இந்த ஆட்சி, தமிழன் குலத்தையே நாசம் செய்யும் முனைப்பில் உள்ளது. தமிழனை கருவருக்க வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். அதற்கு மதுப்பானகடைகளை அரசு மூட வேண்டும் என்று முதல்வரை நான் கேட்டுக்கொள்கிறேன். அதற்கு தமிழகம் முழுவதும், எல்லா மதுக்கடையையும் மூட வேண்டும். இல்லையென்றால் செயற்கை கருத்தரிப்பு தான் அதிகரிக்கும். மேலும் ஆண்கள் எல்லோருக்கும் மலட்டுத்தன்மை அதிகரித்துவிடும்.

மதுக்கடைகளை மூடுவதுடன், எல்லா இடத்திலும் கடந்த 5 மாதங்களாக மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக தேர்தல் அறிக்கை முழுமையாக படித்தவன் நான். நீட் ரத்து செய்வோம் என்று சொல்கிறார்கள். அது மத்திய அரசு நினைத்தாலே பண்ண முடியாது. ஏனெனில், நீட் தேர்வென்பது உச்சநீதிமன்றமே அனுமதி கொடுத்த தேர்வாகும். அப்படியிருக்கையில், இவர்கள் அதை ரத்து செய்வதாக சொல்கின்றனர். போலவே எல்லா குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன் என்று சொன்னார்கள். ஆனால், கொடுத்தார்களா? கொடுக்கவில்லையே... மேலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வரேன் என்றார்கள். அதையாவது கொண்டு வந்தார்களா? அதுவும் இல்லை. பஞ்சத்தில் இருக்கும் அரசாங்கம் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறது.

தமிழகத்தில் வெற்றிகரமாக இரண்டு விஷயம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவை மத்திய அரசால் கொண்டு வந்த இலவச தடுப்பூசி. இரண்டாவது ஒவ்வொரு நபருக்கும் 5 கிலோ அரிசி - ஒரு கிலோ பருப்பு. ரேசன் கடைகளில் இவைகளை 100% இலவசமாக கொடுப்பது, மத்திய அரசுதான். மாநில அரசுக்கு ஒரு நயா பைசா கூட இதில் பங்கில்லை. இத்திட்டம் மட்டும் இல்லையென்றால் தமிழ்நாட்டில் மக்கள் பட்டினி சாவு வந்துவிடும்” என்றார் கடுமையாக.

எம்.வீரமணிகண்டன்