தமிழ்நாடு

தை பிறந்தால் வழி பிறக்குமா... காத்திருக்கும் நெட்டி மாலை தயாரிக்கும் தொழிலாளர்கள்

தை பிறந்தால் வழி பிறக்குமா... காத்திருக்கும் நெட்டி மாலை தயாரிக்கும் தொழிலாளர்கள்

kaleelrahman

தடை செய்யப்பட்ட நெகிழி மாலைகள் வரவால் விற்பனையை இழந்து தவிக்கின்றனர் பாரம்பரிய நெட்டி மாலை தயாரிப்பாளர்கள். மக்களிடம் மாற்றம் வந்தால் மட்டுமே தங்கள் வாழ்க்கை செழிக்கும் என உருக்கமாக தெரிவித்துள்ளனர்.


தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் கால்நடைகளை போற்றும் வகையில் உழவர் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருநாளன்று மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, நெட்டி மாலைகள் அணிவித்து, பொங்கல் வைத்து வழிபடுவது தமிழர் பண்பாடு. இவ்விழாவில் மாடுகளை அலங்கரிப்பதற்கான முக்கிய இடத்தை பிடிப்பது பாரம்பரிய நெட்டி மாலைகளே.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலவல்லம் கிராமத்தில், உழவர் திருநாளில் கால்நடைகளுக்கு அணிவிப்பதற்கான நெட்டி மாலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இக்கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே நெட்டி மாலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் விவசாய கூலி தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். வருடத்தில் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மூன்று மாதம் விவசாய வேலை வாய்ப்பு இல்லாததால் நெட்டி மாலைகள் தயாரித்து, விற்பனை செய்வதை மூன்று தலைமுறைகளாக செய்து வருகின்றனர். விவசாய கூலி வேலை கிடைக்காத இந்த மூன்று மாதங்களில் ஏரிகளில் இயற்கையாய் விளையும் நெட்டிக் குச்சிகளை வெட்டி எடுத்து வந்து பின்னர் அவற்றை சீவி, சுத்தம் செய்து பல்வேறு வடிவங்களாக மாற்றி, கலர் சாயம் நனைத்து, உலர வைக்கின்றனர்.

நன்றாக உலர்ந்த பின்னர் அவற்றை இணைத்து பல்வேறு வடிவ மாலையாக தயாரிக்கின்றனர். இந்த மாலையை கட்டுவதற்கு கூட செயற்கை பொருட்களை பயன்படுத்தாமல் தாழை நார்களை மட்டுமே இவர்கள் பயன்படுத்தி வருவது தனி சிறப்பாகும். ஒருநாள் விற்பனையை நம்பி குடும்பத்தினரோடு மூன்று மாதம் உழைத்து உருவான நெட்டிமாலைகள் தற்போது போதிய விற்பனை ஆவதில்லை என கவலை தெரிவிக்கின்றனர் மேலவல்லம் கிராமமக்கள்.


இதனால் உழைப்புக்கு உண்டான வருவாயை அவர்கள் ஈட்ட முடியாமலும், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் சந்தைகளில் விற்பனையாகும் நெகிழி மாலைகள்தான் என்கின்றனர். கண்ணைகவரும் வண்ணங்களில் பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ள தடை செய்யப்பட்ட நெகிழி மற்றும் பிளாஸ்டிக் மாலைகள்தான் அதிகம் விற்பனையாவதால் வணிகர்கள் நெட்டி மாலைகளை கொள்முதல் செய்வது குறைந்துள்ளது.

இவர்கள் இருப்பிடம் வந்து நெட்டிமாலைகளை கொள்முதல் செய்த வணிகர்கள் தற்போது வராததால் பல்வேறு பகுதிகளுக்கு இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றே விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். பொதுமக்கள் கண்ணைகவரும் வண்ணங்களையும் வடிவங்களையுமே பார்க்கிறார்களே தவிர, அதில் உள்ள ஆபத்தை உணர்வதில்லை எனவும் தெரிவித்தனர்.


மேலும் கால்நடைகள் நெகிழி மாலைகளை தின்று விட்டால் அவைகளுக்கு பாதிப்பு ஏற்படும்.அதே வேலை பாரம்பரிய நெட்டி மாலைகளை தின்றால் எந்த பாதிப்பும் வராது. இதனால் மண்ணுக்கும் பாதிப்பில்லை எனவே மாற்றம் மக்களிடம் வந்தால் மட்டுமே தங்களது மூன்றுமாத உழைப்பின் பலனை முழுதாய் பெறமுடியும் என உருக்கத்துடன் தெரிவித்தனர்.