தமிழ்நாடு

“கமல் அதிமுகவில் சேர்ந்தால் எம்ஜிஆரை உரிமை கொண்டாடலாம்” - ஆர்.பி.உதயகுமார்

“கமல் அதிமுகவில் சேர்ந்தால் எம்ஜிஆரை உரிமை கொண்டாடலாம்” - ஆர்.பி.உதயகுமார்

EllusamyKarthik

கமல் அதிமுகவில் சேர்ந்தால் எம்ஜிஆரை உரிமை கொண்டாட உரிமை கிடைக்கலாம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் அம்மா கிளினிக்கினை திறந்து வைத்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது, தான் எம்ஜிஆரின் வாரிசு என கமல் சொல்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார், “எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக 49 ஆண்டுகளை கடந்து  இந்தியாவின் 3 வது பெரிய இயக்கமாக இருந்து வருகிறது. 

எம்ஜிஆர் உருவாக்கிய சத்துணவு திட்டம் உள்ளிட்ட அனைத்து  திட்டங்களும் அதிமுகவிற்கே சொந்தம். தமிழகம் முழுவதும் அதிமுக அரசிற்கு ஆதரவு அலை வீசி வருகிறது. எம்ஜிஆருடன் பழகியவர்கள், பயணம் செய்தவர்கள், ஆசி பெற்றவர்கள் எல்லோரும் அவரை  வாழ்த்தலாம். போற்றலாம். கொள்கையை  கடைபிடிக்கலாம். அதற்கு ஆட்சேபனை இல்லை. எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட கட்சியை தள்ளிவிட்டுவிட்டு புரட்சி தலைவரை சொந்தம் கொண்டாடி மக்களை குழப்பும் வேலை மக்கள் மத்தியில் எடுபடாது. 

அதிமுக என்பது எம்ஜிஆர் பெற்றெடுத்த குழந்தை. வளர்த்தெடுத்தது ஜெயலலிதா. சாமானிய தொண்டர்கள் கட்டி காப்பாற்றி வருகிறார்கள். 

கமல் எம்ஜிஆரின் அன்புக்குரியவர் என்பதை மறுக்கவில்லை. ஆனால் எம்ஜிஆரின் கொள்கையை தாங்கி பிடிப்பவர்கள் அதிமுக தொண்டர்கள் மட்டுமே. 

கமல் விரும்பினால், அதிமுகவில் சேர்ந்தால், எம்ஜிஆரை உரிமை கொண்டாட உரிமை கிடைக்கலாம். அதிமுகவை தள்ளி வைத்துவிட்டு எம்ஜிஆரை உரிமை கொண்டாடும் கமல்ஹாசனின் வசனங்கள், வாதங்கள் மக்கள் மத்தியில் எடுபடாது” என்றார். 

இதையடுத்து அதிமுகவில் ரஜினி, கமல் இணைய விரும்பினால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற கேள்விக்கு “சமதர்மம், இட ஒதுக்கீடு, பெண் உரிமை, சமூக நீதி உள்ளிட்ட திராவிட இயக்கங்களின் கொள்கையை ஏற்றுக்கொள்பவர்களை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் இருந்ததில்லை. 

யார் யாரையெல்லம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை முதல்வரும் துணை முதல்வரும் கட்சி மூத்த நிர்வாகிகளும் முடிவு செய்வார்கள். முதல் முதலாக பிரசாரத்தை துவக்கியுள்ள கமல் மக்களின் கவனத்தை ஈர்க்க என்ன திட்டங்களை செய்வேன் என தெரிவித்தால், மக்கள் மத்தியில் வரவேற்பு பெறும்.

வளர்ச்சியில் முதல் இடத்தில் உள்ள தமிழகத்திற்கு கமல் இன்னும் என்ன சொல்லித்தர போகிறீர்கள்? 

தேர்தலில் ஆயிரம் கட்சிகள் வந்தாலும் மக்கள் மத்தியில் முதல்வர் என்ற இடத்தை எடப்பாடி பழனிசாமி மட்டுமே பிடித்துள்ளார். தேர்தல் வரும்போது மக்கள் உரிய தீர்ப்பை வழங்குவார்கள். 

உலகநாயகன், சிறந்த கலைஞர் போன்ற பல்வேறு பட்டங்களை பெற்றுள்ள கமல், முதல்வர்  பட்டம் பெற ஆசைப்படுகிறார். தமிழகத்தில் முதல்வர் பட்டம் ஏற்கெனவே புக் ஆகி விட்டது. தமிழகத்தின் முதல்வர் பட்டம் காலியாக இல்லை” என்றார்.