தமிழ்நாடு

"அதானி ஊழல் குற்றவாளி என்றால், அதற்கு உதவியாக இருந்த மோடியும் குற்றவாளி தான்"-ஆ.ராசா

"அதானி ஊழல் குற்றவாளி என்றால், அதற்கு உதவியாக இருந்த மோடியும் குற்றவாளி தான்"-ஆ.ராசா

webteam

நாட்டு மக்கள் வங்கியிலும் எல்ஐ சி யிலும் முதலீடு செய்த பணத்தை கடனாக பெற்று பல பங்குசந்தையில் முதலீடுகள் செய்து இழப்பு ஏற்படுத்தி ஏமாற்றிய அதானி குற்றவாளி என்றால், அவருக்கு உதவி செய்த நாட்டின் பிரதமர் மோடியும் குற்றவாளி தான் என்று, திமுக நாடாளுமன்ற உறுப்பினரான அ. ராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் நகர திமுக சார்பில், நகர செயலாளர் சத்தியமூர்த்தி தலைமையில், தமிழக முதல்வர் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தாமோ அன்பரசன், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அ. ராசா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் பேசிய அ.ராசா, நாட்டு மக்கள் எல்ஐசி மற்றும் பாரத ஸ்டேட் வங்கிகளில் முதலீடு செய்துள்ள பணத்தை எல்லாம், பிரதமர் மோடியின் துணையுடன் கடனாக பெற்றுக் கொண்ட அதானி, நாட்டில் உள்ள அனைத்து பொது நிறுவனங்களையும் சொந்தமாக்கி வெளிநாடுகளுக்குச் சென்று, பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, அதன்மூலம் உலக அளவில் 30ஆவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். அவருக்கு பக்கபலமாக இருந்து இரண்டாவது இடத்திற்கு அதானியை கொண்டுவர உதவியாக இருந்தது, நம் நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி.

இந்நிலையில் இந்த முறைகேடுகள் மூலம், அதானி தற்போது முதலீடு செய்த நிறுவனங்கள் 10லட்சம் கோடி அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளது. மீண்டும் அதானி உலக அளவில் பணக்காரர்கள் வரிசையில் 36ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்று கூறப்படும் நிலையில், இதனால் இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்து, இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வெளிநாட்டு பத்திரிகையான ஹின்டன்பெர்க், திட்டமிட்டு நாட்டு மக்களின் பணத்தை கடனாக பெற்று, முறைகேடுகள் மூலம் இழப்பு ஏற்பட்டதாக பிம்பத்தை ஏற்படுத்தி கொள்ளையடித்துள்ள அதானி ஒரு குற்றவாளி என்று கூறுகிறது.

அப்படி அதானி குற்றவாளி, திருடன் என்றால் அதானியை பல்வேறு வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட செய்த நாட்டின் பிரதமர் மோடியும் குற்றவாளி தானே. இதை தைரியமாக நாடாளுமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் எடுத்துச் சொல்லும் ஒரே முதல்வர் திராவிட மாடல் ஆட்சி செய்யும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மட்டும்தான். அதேபோல பாஜகஅரசு நாடாளுமன்றத்தில் மக்களுக்கு எதிராக கொண்டுவந்த சட்டங்களுக்கு எதிராக, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய ஒரே முதல்வர் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மட்டும் தான்.

மதச்சார்பற்ற ஜனநாயக நாடான இந்தியாவை மதவாத நாடாகவும், தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்குகிற நாடாகவும், சிறுபான்மையின மக்களுக்கு விரோதமான சட்டங்கள் இயற்றி நாட்டை துண்டாட துடிக்கும் மோடிக்கு பாடம் கற்பிக்கவும், இந்திய அரசியல் அமைப்பையும், தேசத்தை காப்பாற்றவும் தகுதி உள்ள ஒரே தலைவர், தமிழக முதல்வர் மட்டும் தான் அவரை வாழ்த்துவோம் என்று உரையாற்றினார்.