சமீபத்தில் விருப்ப ஒய்வு பெற்ற தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, மாணவர்களுக்கு ஐஏஎஸ் பயிற்சி வகுப்பு எடுக்கிறார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ் பாபு. இவர், 1995-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து, தமிழக அரசு பணியில் சேர்ந்தார். கடந்த 25 ஆண்டுகளாக தமிழக அரசில் முக்கிய பதவிகளை வகித்து வந்தார். கடைசியாக, தகவல் தொழில்நுட்பத் துறையின் முதன்மை செயலாளராகவும் டான்பினெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராகவும் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் முக்கியமான ஒரு டெண்டர் விவகாரத்தில் ஆளுங்கட்சி முக்கியப்புள்ளிகளுடன் இவருக்கு மோதல் ஏற்பட்டதாக ஒரு தகவல் பரவியது.
இதையடுத்து, சந்தோஷ் பாபு கடந்த ஜனவரி மாதம் தமிழக தலைமை செயலாளருக்கு விருப்ப ஓய்வு கடிதத்தை (வி.ஆர்.எஸ்.) அளித்தார். கடிதத்தில், ‘தனிப்பட்ட காரணங்களுக்காக விருப்ப ஓய்வு பெற விரும்புகிறேன்’’ என்று சந்தோஷ் பாபு குறிப்பிட்டிருந்தார்.
இன்னும் 9 ஆண்டுகள் பணிக்காலம் இருக்கும் நிலையில் சந்தோஷ் பாபு திடீரென்று விருப்ப ஓய்வு பெறுவது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு, சென்னையில் உள்ள குடிமைப்பணித் தேர்வுக்கான ஒரு தனியார் பயிற்சித்தில் பயிற்றுநராக சேர்ந்துள்ளார். முழு நேர பயிற்சியாளர் பணியில் இணைந்துள்ள அவா், மின் ஆளுமை, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பாடங்களை மாணவர்களுக்கு கற்றுத் தரவுள்ளதாக கூறப்படுகிறது.