தமிழ்நாடு

”வேலை கொடுக்கலனா ஜெயலலிதா சமாதியை குண்டு வீசி தகர்ப்பேன்” -மாற்றுத்திறனாளியின் ’ஷாக்’ மனு

”வேலை கொடுக்கலனா ஜெயலலிதா சமாதியை குண்டு வீசி தகர்ப்பேன்” -மாற்றுத்திறனாளியின் ’ஷாக்’ மனு

webteam

அரசு வேலை வழங்கா விட்டால் ஜெயலலிதா சமாதியை பெட்ரோல் குண்டு வீசி தகர்ப்பேன் என்று காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி அளித்த மனுவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை மெரினா காமராஜர் சாலையில் காவல்துறை டிஜிபி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. டிஜிபி அலுவலத்தில் மக்கள் தங்களது மனுக்களை அளிக்க மயிலாப்பூர் தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள நுழைவாயில் வழியாக செல்வது வழக்கம். அதிகாரிகளை சந்திக்கச் செல்லும் நபர்கள் முன் அனுமதி பெற்றால் மட்டுமே பாதுகாப்பு பிரிவு போலீசார் உள்ளே செல்ல அனுமதிப்பார்கள்.

இந்நிலையில் மயிலாப்பூர் தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள டிஜிபி அலுவலக நுழைவு வாயல் வழியாக மாற்றுத்திறனாளி ஒருவர் உள்ளே சென்றுள்ளார். அவரை பாதுகாப்பு பிரிவு போலீசார் வழி மறித்து விசாரித்துள்ளனர். அப்போது அவரிடம் முன் அனுமதி பெற்றது சம்பந்தமாக எந்த ஆவணமும் இல்லை. அதனால் அவரை பாதுகாப்பு போலீசார்  உள்ளே அனுமதிக்க வில்லை. இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபர் மனு கொடுக்க வேண்டும் சொல்ல, அந்த மனுவை  போலீசார் வாங்கி படித்துள்ளனர். 

மாற்றுத்திறனாளி அளித்த மனுவில், “எனக்கு அரசு வேலை வழங்க வேண்டும். வழங்காவிட்டால் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா சமாதியை பெட்ரோல் குண்டு வீசி தகர்ப்பேன். அதற்கு காவல்துறை அனுமதி தரவேண்டும். அவ்வாறு ஈடுபடும் என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இதனைப் பார்த்து அதிர்ந்து போன பாதுகாப்பு பிரிவு போலீசார் மெரினா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த மெரினா போலீசார் மாற்றுத்திறனாளியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், சென்னை கொருக்குப்பேட்டை பாரதிநகரைச் சேர்ந்த மணிகண்ட பிரசாத் (27) என்பது தெரிய வந்தது.

மேலும் இவர் அரசு வேலை வழங்கக்கோரி தலைமைச் செயலகம், கவர்னர் மாளிகை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்டவற்றில் மனுக்கள் கொடுத்ததும், அரசு வேலை கிடைக்காததால் மனஉளைச்சலில் இருந்த மணிகண்ட பிரசாத் இந்த மனுவை கொடுக்க வந்ததும் தெரியவந்தது. மேலும்  பிரசாத் 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருப்பதும், 4 ஆண்டுகளுக்கு முன்பு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

விசாரணைக்கு பிறகு அவரை மெரினா போலீசார் திருவல்லிக்கேணி லாக் நகரில் உள்ள காப்பகத்திற்கு அவரை அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து அறிவுரை வழங்கி அவரது நண்பர் காசிம் உசேனுடன் பிரசாத்தை காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.