முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் வீடுகளில் தொடர்ந்து சோதனை நடைபெறும் என்று சோதனையில் ஈடுபட்டிருக்கும் வருமான வரித்துறை அதிகாரி மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜியின் நண்பர் மணி என்பவரது நிதி நிறுவனத்தில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றிருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். அங்கிருந்து ஏராளமான ஆவணங்களை கைப்பற்றியிருப்பதாகவும் வருமான வரித் துறை அதிகாரி மணிகண்டன் தெரிவித்தார்.
இதற்கிடையே, செந்தில் பாலாஜி உறவினர் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான பினாமி சொத்து ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. செந்தில் பாலாஜியின் உறவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் 4 வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை நடந்த சோதனையில், ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே விசாரணைக்காக ஆஜராகுமாறு சம்மன் அனுப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் ஆஜராகவில்லை.
செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூர், சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில், வீடுகள், நிறுவனங்கள் என சுமார் 20 இடங்களில் கடந்த 21ம் தேதி சோதனை தொடங்கியது. கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள ஜவுளி ஆலை, கோவை சாலையில் உள்ள உணவு விடுதி உள்ளிட்ட இடங்களில் 36க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் நடத்திவரும் நிதி நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது.