பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலாவிடம் கடந்த இரு நாள்களில் சுமார் 16 மணி நேரம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது இல்லத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் சசிகலா அறையிலிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக, பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன்படி வீரராகவ ராவ் தலைமையிலான 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு, கடந்த 2 நாட்களாக சுமார் 16 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
5 பைகளில் ஆவணங்களைக் கொண்டு சென்று, அதுதொடர்பாக சசிகலாவிடம் தனி அறையில் விசாரணை நடத்தியதாகவும் தெரிகிறது. சுமார் ஆயிரம் கேள்விகள் கேட்கப்பட்டு, பதில் பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த விசாரணை கடந்த இரு நாள்களில் 16 மணி நேரத்துக்கும் அதிகமாக நடத்தப்பட்டதாக தெரிகிறது. தேவைப்பட்டால், சசிகலாவிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அந்நிய செலாவணி வழக்கில் வரும் 20-ஆம் தேதி காணொலி காட்சி முறையில் சசிகலா ஆஜராக வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக நேரில் ஆஜராகும்படி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததை எதிர்த்து சசிகலா தரப்பு உயர்நீதிமன்றத்தை நாடியது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சசிகலா நேரில் ஆஜராக விலக்கு அளித்தது. அதனை ஏற்று, காணொலி காட்சி மூலம் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.