T Natarajan, Cricket player PT
தமிழ்நாடு

”மொழி புரியாம ஆரம்பத்துல ரொம்ப கஷ்டப்பட்டேன்; சேவாக் எனக்கு உறுதுணையா இருந்தார்” - நடராஜன் பேச்சு

"மண் தரையில் உறங்கினேன், சாப்பாட்டிற்கே வழியின்றி இருந்துள்ளேன். உருக்கமான நினைவுகளை பகிரந்த கிரிக்கெட் வீரர் நடராஜன்"

webteam

”நான் பட்ட கஷ்டம் யாரும் படக்கூடாது என்பதற்காக எனது கிராமத்தை சேர்ந்த கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களை சொந்த செலவில் விளையாட அனுப்பி வைப்பேன்” என்று கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்தார். தான் பயின்ற கல்லூரியில் மாணவ மாணவியரிடம் தனது உருக்கமான நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டார்...

Natarajan

சேலம் சின்னப்பம்பட்டி நடராஜன்:

குக்கிராமத்தில் பிறந்து விடாமுயற்சியால் கிரிக்கெட்டில் களத்தில் "யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட்" என்ற பெயர் பெற்றவர் சேலம் சின்னப்பம்பட்டி நடராஜன். சேலத்தில் நடராஜன் படித்த கல்லூரியில் அவருக்கான பாராட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் பங்கேற்று பேசிய நடராஜன் வெற்றியாளர் ஆவதற்கு முந்தைய தனது வாழ்க்கையின் உருக்கமான நினைவுகளை மாணவ, மாணவியரிடையே மனம் திறந்து பகிர்ந்து கொண்டார்.

"சாப்பாட்டிற்கு கூட வழி இன்றி பல நாட்கள் பட்டினி கிடந்துள்ளேன்"

நான் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன். சொந்த வீடு கூட இன்றி குறுகிய அளவிலான குடிசையில் மண் தரையில் படுத்து உறங்கி என் வாழ்நாளை கடந்து வந்தேன். சாப்பாட்டிற்கு கூட வழி இன்றி பல நாட்கள் பட்டினி கிடந்துள்ளேன். அம்மா செய்யும் ரேஷன் அரிசி சாப்பாடுதான் ஹெல்த்தி என்ற எண்ணத்தை உருவாக்கிக் கொண்டேன். இதுபோன்ற விஷயங்களை ஒவ்வொருவரும் படிக்கற்களாக எண்ணி வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறி செல்ல வேண்டும்.

Natarajan

”கடினமாக உழைத்தால் மட்டும் தான் வெற்றிகள் அனைத்தும் கிடைக்கும்”

தடைகள் இல்லாமல் வாழ்க்கையில் இலக்கை அடைய முடியாது. குறிக்கோளை நோக்கி ஓடிக் கொண்டிருந்தால் அதற்கான பலன் சிலருக்கு உடனே கிடைத்து விடும், சிலருக்கு தாமதமாக கிடைக்கும். எனவே, இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் கடினமாக உழைத்தால் மட்டும்தான் வெற்றிகள் அனைத்தும் கிடைக்கும்.

நமக்கு எவரேனும் அறிவுரை கூறினாலே அதை பின்பற்றுவது கடினமாகதான் இருக்கும். ஆனால், அந்த அறிவுரையை ஏற்று அதன்படி வாழ்க்கையில் பயணித்தால் நமக்கான இலக்கை அடைய முடியும். அப்படி எனக்கு உறுதுணையாக இருந்தது எனது அண்ணன். எப்பொழுதெல்லாம் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டாலும் அண்ணனின் அறிவுரையை கேட்ட பிறகு தான் விளையாடுவேன் என்று நடராஜன்” பேசினார்.

இதைத் தொடர்ந்து மாணவ மாணவியருடன் கலந்துரையாடிய நடராஜன் " கிரிக்கெட் உலக தல தோனி, திரையுலக தல அஜித்" குறித்த கேள்விக்கு சுவாரஷ்யமாக பதிலளித்தார்.

“சிஎஸ்கே டீம் ஏன் நல்லா பண்றாங்கனா, தோனிய பார்த்தாலே டீம்க்காக நம்ம பண்ண வேண்டும் என்ற உள்ளுணர்வு வரும். தோனி கிட்ட இருக்க Vibe-யே வேற; அந்த மாதிரி ஒரு பாசிட்டிவ் மனிதர் தோனி!” என்று தோனி குறித்து நடராஜன் பேசினார்.

நடிகர் அஜித் குமார் பற்றி பேசுகையில், “தல அஜித்த பத்தி சொல்லவே வேணாம்.. ரொம்பவே பணிவான மனிதார்.. என்னுடைய பிறந்தநாள் நிகழ்வில் பிரபலங்களை எல்லாம் தாண்டி அனைவரையும் நன்றாக கவனித்தார். அவ்ளோ கம்ஃபோர்ட்டா வச்சிகிட்டார்; அஜித் சார பார்க்கும் போது வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் முன்னேற முடியும் என்ற நம்பிக்கை வருகிறது” என்று நெகிழ்ச்சியாக கூறினார்.

அப்போது அவரிடம், நீங்கள் முதன் முறையாக இந்திய அணியில் இடம்பெறும் போது உங்களது அனுபவம் எப்படி இருந்தது என்று மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நடராஜன்,

Natarajan

"சேவாக் எனக்கு உறுதுணையாக இருந்தார்"

"தமிழ் தவிர எனக்கு எதுவும் தெரியாது; அங்க முழுசா இந்தி தான்; ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஒரு மாதிரி தனியா இருக்கிற மாதிரி ஃபீல் இருந்துச்சு. தொடக்கத்தில் ரொம்ப கஷ்டப்பட்டேன். எனக்கு விளையாட்டு ரொம்ப பிடிக்கும் என்பதால் கஷ்டங்களை தாண்டி விளையாடுவேன்; இதெல்லாம் ஒரு பிரச்னை என்று நினைத்து ஒதுங்கி இருந்தால் எதுவும் செய்திருக்க முடியாது.

எனக்கு சேவாக் சார் ரொம்ப சப்போர்ட் பண்ணினார். ஐபிஎல் போட்டிகளில் காயம் ஏற்பட்ட போது, நீ மொதல்ல பேமிலியை பாரு. என்றெல்லாம் மோட்டிவேட் பண்ணுவாரு. தம்போ ரைட்டோ நிறைய பேச ஆரம்பிங்க. அப்பதான் அந்த பழக்கம் வரும். நானும் அதுக்கு அப்புறம்தான் பேச ஆரம்புச்சேன். ஆனா, ஆரம்பத்துல ரொம்ப கஷ்டப்பட்டேன்" என்று தெரிவித்தார்.