தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் 33 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி திண்டுக்கல்லில் பேட்டியளித்தார்.
திண்டுக்கல்லில் 69ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். விழாவில் 6,117 பேருக்கு கூட்டுறவுத்துறை சார்பில் 37.44 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி காண சான்றிதழ் முதல்முறையாக இங்கு தான் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் கூட்டுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி பேசுகையில், ’’இந்தியாவில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் சிறந்து வங்கியாக தமிழக கூட்டுறவு வங்கி இந்த வருடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் செயல்படக்கூடிய கூட்டுறவு வங்கிகளில் லாபத்தில் இயங்கக்கூடிய ஒரே கூட்டுறவு வங்கி தமிழகத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கி தான். திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் நகைக்கடன், விவசாயக்கடன், சுயஉதவிக் குழு கடன் என ரூ.900 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை அமைதியான முறையில் பல புரட்சிகளை செய்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் செயல்படும் ரேஷன் கடைகளை பார்வையிட்ட மத்திய அமைச்சர்கள் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகள் பொதுமக்களுக்கு நல்ல முறையில் சேவைகள் செய்து கொண்டிருப்பதாக பாராட்டி சான்றுகள் வழங்கி சென்றுள்ளனர். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் விவசாய கடனாக ஒன்பது கோடி மட்டுமே வழங்கப்பட்டது. அதேபோல ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு கடந்த ஆண்டு மட்டும் 10,292 கோடி விவசாய கடன் வழங்கப்பட்டுள்ளது’’ என்று பேசினார்.
முழு விபரம்: ”கூட்டுறவுத்துறை வளர்ச்சியில் நிதியமைச்சராக எனக்கு திருப்தியில்லை”-அமைச்சர் பிடிஆர் பேச்சு
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, மதுரையில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் கலந்து கொண்ட நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூட்டுறவு துறை செயல்பாடு திருப்திகரமாக இல்லை என குற்றம் சாட்டியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ’’எங்கள் இருவரை பொருத்தவரை ஏழு கோடி மக்களைத்தான் திருப்தி படுத்த வேண்டும். அதற்கு அடுத்து முதலமைச்சர் தவிர வேறு யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை’’ எனக் கூறினார்.