எம்.ஜி.ஆர். உடன் நாளை நமதே படத்தில் நடிக்காதது பெரிய இழப்பு என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் எனும் நிகழ்ச்சியின் சீசன் 3 தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், சில அரசியல் கருத்துக்களை இடையே கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி, நேற்றைய நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் சில கேள்விகளை முன் வைத்தனர் அப்போது பேசிய கமல்ஹாசன் "எம்.ஜி.ஆர். உடன் நாளை நமதே படத்தில் நடிக்க வேண்டியது."
"அந்தப் படத்துக்கு சேது மாதவன் இயக்குநர். என்னுடைய கால்ஷீட்டுக்காக எம்.ஜி.ஆர். ஒரு மாதம் காத்திருந்தார். ஆனால் அப்படத்தில் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதுவும் எம்.ஜி.ஆருக்கு தம்பியாக நடிக்க கூடிய பாத்திரம். யோசித்துப் பாருங்கள், அப்போது அந்தப் படத்தில் நாளை நமதே என அவருடன் டான்ஸ் ஆடி, பாட்டுக்கு வாய் அசைத்திருந்தால் இப்போதுள்ள சூழ்நிலைக்கு பிரயோஜனமாக இருந்திருக்கும்."
மேலும், தொடர்ந்த கமல்ஹாசன் "நாளை நமதே என்ற வாசகத்தைதான் இப்போது பயன்படுத்தி வருகிறேன். அப்போது நடித்திருந்தால் இப்போது நான் செல்லும் இடங்களில் எல்லாம் அந்தப் பாடலையும் முடிந்தால் படத்தையும் போட்டுக் காட்டிருப்பேன். இப்போது யோசித்துப் பார்த்தால் எவ்வளவு பெரிய இழப்பு என தோன்றுகிறது" என்றார் அவர். அதேபோல கடுமையான தருணங்களில் உங்களுக்கு தோள் கொடுத்தவர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த கமல் "விஸ்வரூபம் படப் பிரச்னையின்போது தமிழக மக்கள் எனக்கு தோளோடு தோள் கொடுத்ததை மறக்கவே முடியாது."
ஒருவர் தான் வாழும் 200 சதுர அடி வீட்டை எனக்கு எழுதி வைக்கிறேன் என்றார். அப்போது நான் நீங்கள் எங்கே இருப்பீர்கள் என கேட்டதற்கு "நான் அண்ணன் வீட்டுக்கு போயிடுறேன் நீங்க வாங்க" என கூறினார். இதற்கு நான் என்ன செய்யப்போகிறேன் என நினைத்துதான் இப்போது நான் இருக்கும் நிலை" என்றார். மேலும் "என் எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காகத்தான் என சொல்வது வெறும் திரைப்பட வசனமல்ல. அப்போது என் மீது மக்கள் கொடுத்த அன்புக்கு எப்போதும் என்னால் வட்டி மட்டுமே செலுத்தி முடியும். அவர்களின் அன்பு என்ற கடனை அடைக்கவே முடியாது" என்றார் கமல்ஹாசன்.