ஓமலூர் அருகே இளைஞர் சதீஸ்குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தன்னை சிக்க வைக்க சிலர் முயற்சிப்பதாக பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரியவடகம்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி. கூலி தொழிலாளியான இவரது இளைய மகன் சதீஸ்குமார். இவர் நேற்று மாலை அங்குள்ள ரயில்வே ட்ராக் ஓரமாக பிணமாக கிடந்தார். இதற்கு பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனின் மிரட்டலே காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இதுகுறித்து மாரியப்பன் செய்தியாளர்களை பேட்டியளித்தார். அப்போது, கடந்த 2 நாள் முன்பு உறவினர் யுவராஜ் வீட்டிற்கு சென்றபோது அதேபகுதியை சேர்த்த சதீஸ்குமார் என்பவர் போதையில் மோட்டார் சைக்கிளில் வந்து எனது கார் மீது மோதிவிட்டார். இதில், காரின் கதவு லாக் உடைந்துவிட்டது. நானும் உறவினர் யுவராஜும் இதுகுறித்து சதீஸ்குமாரின் அம்மாவிடம் தெரிவித்தோம். அதற்கான செலவை கொடுத்துவிடுவதாக கூறிய நிலையில், நடந்தது குறித்து தெரிவித்துவிட்டு நாங்கள் வந்துவிட்டோம். இந்த நிலையில் தற்போது சதீஸ்குமார் தற்கொலை செய்து கொண்டதை பயன்படுத்தி சிலர் என் மீது அவதூறு பரப்புகிறார்கள். இதை வைத்து என்னை சிக்க வைத்து எனக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவும், பணம் பறிக்கவும் முயற்சிப்பதாகக் கூறினார். மேலும், இறந்த சதீஸ்குமார் ஏற்கனவே காதல் தோல்வி காரணமாக தற்கொலைக்கு முயற்சி செய்தவர் என்றும் நாங்கள் அவரது வீட்டற்கு செல்லும்போது அவரது பெற்றோர்கள் சதீஸ்குமாரை திட்டிக்கொண்டு இருந்ததாகவும் மாரியப்பன் தெரிவித்தார்.