தமிழ்நாடு

“நான் யாரிடமும் பேச விரும்பவில்லை..பெற்றோருடனே செல்கிறேன்”: இளமதி

“நான் யாரிடமும் பேச விரும்பவில்லை..பெற்றோருடனே செல்கிறேன்”: இளமதி

rajakannan

சேலத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளமதி தன்னுடைய பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த செல்வன், இளமதி ஆகிய இரு‌வரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்க்கும்போது காத‌லித்துள்ளனர். இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும், திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். திராவிட விடுதலை கழகத்தைச் சேர்ந்த செல்வன், அந்த இயக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினரான ஈஸ்வரன் உதவியோடு சில நாட்களுக்கு முன்னர் இளமதியை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.

அன்று இரவே கார்கள் மற்றும் பைக்குகளில் வந்த சுமார் 40 பேர் செல்வனை தாக்கிவிட்டு, இளமதியையும் கடத்திச் சென்றதாக கூறப்பட்டது. இது தொடர்பான காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன. பின்னர், காவல்துறையினர் தங்களுக்கு வந்த புகாரை தொடர்ந்து, செல்வன் மற்றும் ஈஸ்வரன் இருவரையும் மீட்டனர். மேலும், செல்வன் கொடுத்த புகாரின் பேரில் 50 பேர் மீது கொளத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனாலும், அடுத்த சில நாட்களாக இளமதி மீட்கப்படவில்லை.

இதனிடையே, #இளமதி_எங்கே என்ற ஹேஷ்டேக் மூலம் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். அதுஒருபுறம் இருக்க, சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதி கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து மக்களவையில் திமுக எம்.பி செந்தில்குமார் பேசினார். அப்போது பேசிய அவர், சேலத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளம் தம்பதியினரான செல்வன் மற்றும் இளமதி ஒரு கும்பலால் தாக்கப்பட்டனர். திருமணம் முடிந்த உடனே மணப்பென் இளமதி கடத்தப்பட்டார். இதற்கான சிசிடிவி காட்சிகள் இருந்தும் காவல்துறையினர் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில்தான், சாதி மறுப்பு திருமண விவகாரத்தில் கடத்தப்பட்டதாக புகாரளிக்கப்பட்ட இளம்பெண் இளமதி, சேலம் மேட்டூர் மகளிர் காவல்நிலையத்தில் இன்று ஆஜரானார். வழக்கறிஞர் சரவணன் என்பவருடன் ஆஜரான அவரிடம், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தான் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக தன்னுடைய வாக்குமூலத்தில் இளமதி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, காவல் நிலையத்தில் இருந்த திராவிடர் விடுதலைக் கழக ஆதரவாளர்கள் இளமதியிடம் பேச முயன்றனர். ஆனால், தான் யாரிடமும் பேசவிரும்பவில்லை என்றும் பெற்றோருடன் சென்று வாழ்ந்து கொள்வதாகவும் இளமதி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, வரும் திங்கட்கிழமை இளமதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். பின்னர், நீதிமன்றம் கொடுக்கும் அறிவுறுத்தலின்படி இளமதியை பெற்றோருடன் அனுப்புவது குறித்து போலீசார் முடிவு செய்வார்கள் எனத் தெரிகிறது.

இதனிடையே, சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளமதியை கடத்தியதாக கொளத்தூர் மணி மற்றும் திருமணம் செய்து கொண்ட செல்வன் உள்ளிட்ட 4 பேர் மீது பவானி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் கொளத்தூர் மணி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.