தமிழ்நாடு

"ஜெயலலிதா சிகிச்சையின்போது சிசிடிவி கேமராக்களை நான் அகற்ற சொல்லவில்லை"- ஓபிஎஸ் வாக்குமூலம்

"ஜெயலலிதா சிகிச்சையின்போது சிசிடிவி கேமராக்களை நான் அகற்ற சொல்லவில்லை"- ஓபிஎஸ் வாக்குமூலம்

Veeramani

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையின்போது  சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதல் முறையாக ஆஜராகி இன்று வாக்கு மூலம் அளித்தார். அந்த வாக்குமூலத்தில் பல்வேறு தகவல்களை அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் அதில், “ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சொந்த ஊரில் இருந்தேன். சொந்த ஊரில் இருந்து வந்த பிறகு தலைமைச் செயலாளரிடம் விவரங்களை கேட்டறிந்தேன். 2016 செப்டம்பர் 22க்கு பிறகு ஜெயலலிதாவை நேரில் பார்க்கவில்லை. ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகம் இருந்ததை தவிர அவருக்கு இருந்த வேறு உடல் உபாதைகள் பற்றி தெரியாது” என்று கூறியிருந்தார்.

மேலும், “தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்கும் வரை நான் அளித்த பேட்டியில் பேசியது அனைத்தும் சரியானதே. நோயின் தன்மையை பொறுத்து வெளிநாடுகளுக்கு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களிடம் சிசிக்சை அளிக்க அரசியல் பிரபலங்களை உயர்சிகிச்சைக்காக அழைத்து செல்வது தவறு இல்லை. சசிகலாவின் அழைப்பின் பெயரில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்க அமெரிக்க மருத்துவர் சமின் சர்மா வந்தார். ஆஞ்சியோகிராபி சிகிச்சை அளிக்க கூறிய நிலையில், அவர் எந்த சிகிச்சையும் அளிக்காமல் சென்றது தொடர்பான விவரங்கள் எதுவும் எனக்கு தெரியாது” என்றும் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 35 நாட்களில் அண்ணா, எம்.ஜி.ஆர் போல ஜெயலலிதாவையும் வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர் வேலுமணி ஆகியோரிடம் சொன்னேன்  எனவும் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இன்று ஆணையத்திடம் ஆஜரான ஓபிஎஸ் இடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டன. நாளையும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.