தமிழ்நாடு

“குட்கா ஊழல் நடந்தது உண்மைதான்” - முன்னாள் ஆணையர் ஜார்ஜ் பேட்டி

“குட்கா ஊழல் நடந்தது உண்மைதான்” - முன்னாள் ஆணையர் ஜார்ஜ் பேட்டி

rajakannan

குட்கா வழக்கு தொடர்பாக முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஜார்ஜ் பேசுகையில், “குட்கா ஊழல் நடந்தது உண்மைதான். ஆனால், குட்கா விவகாரத்தில் எனது பெயர் சேர்க்கப்பட்டது திட்டமிட்ட சதி. நான் டிஜிபி ஆவதை தடுக்க சதி நடந்துள்ளது. டிஜிபி ஆவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் எனது பெயர் குட்கா விவகாரத்தில் சேர்க்கப்பட்டது. ரூ50 லட்சம் வாங்கியதாக ஐ.டி கூறியது தவறான தகவல். உண்மைக்கு புறம்பான தகவல் பரப்பப்படுகிறது. 

குட்கா விற்பனை போன்ற பெரிய விவகாரம் காவல் ஆணையரின் ஆதரவுடன் மட்டுமே நடக்குமா?. குட்கா விஷயத்தில் என்னைக் குறிவைத்து செயல்படுவது மிகவும் வருத்தமாக உள்ளது. குட்கா விவகாரத்தில் ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் திமுக எம்.எல்.ஏ அன்பழகன் எனது பெயரை குறிப்பிட்டுள்ளார். நான் ஆணையராக பதவிக்கு வந்த போது குட்கா தொடர்பான வதந்திகள் பரப்பப்பட்டன. லஞ்சம் பெற்றதாக திமுக எம்.எல்.ஏ அன்பழகன் மனுவில் குறிப்பிட்ட காலத்தில் நான் ஆணையராக இருந்தேன். 

சிபிஐ சோதனையின் போது வீட்டில்தான் இருந்தேன். எனது வீட்டில் இருந்து வீட்டுக் கடன், ஆயுள் காப்பீடு ஆவணங்கள் மட்டுமே எடுத்துச் சென்றனர். நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. 33 ஆண்டுகளாக காவல்துறையில் சிறப்பான சேவையாற்றி பணியை முடித்துள்ளேன். தமிழகத்தில் முறைகேடாக குட்கா விற்பனை செய்ய நான் லஞ்சம் வாங்கவில்லை. சில அதிகாரிகள் துரோகம் செய்துவிட்டனர்.  

2011ஆம் ஆண்டு முதல் நீண்ட நாட்களாக இதுதொடர்பான ஆய்வு மற்றும் விசாரணை நடைபெற்றது. முதல்கட்ட ஆய்வு மற்றும் விசாரணைக்குப் பிறகு இதுகுறித்து டிசியிடம் தெரிவித்ததாகக் கூறினர். புகார் கூறப்பட்ட குடோனை பார்வையிட்ட அதிகாரிகள் அங்கு புகையிலை பொருட்கள் இல்லை என்றனர். எனவேதான், அரசுக்கு இதுகுறித்து கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டேன். 

பணி விவர அறிக்கையில் ஜெயக்குமாருக்கு எதிர்மறையான அறிக்கையை அளித்தேன். துணை ஆணையர் ஜெயக்குமாருக்கு பல பொறுப்புகளை கொடுத்தேன். ஆனால், அவரது செயல்பாடுகள் சரியில்லை எனத் தெரிந்தது. துணை ஆணையர் ஜெயக்குமார் அனைத்தையும் மறைத்துவிட்டார். இணை ஆணையர் வரதராஜுவிடம் இதுபற்றி தெரியுமா எனக் கேட்டபோது, அவர் தெரியாது என்றார். குட்கா விவகாரம் பற்றி நல்ல அதிகாரியான மாதவரம் துணை ஆணையர் விமலாவிடம் கேட்டறிந்தேன். சென்னை காவல் ஆணையர்கள் 4 பேரின் பெயர்களும் இந்த விசாரணை தொடர்பான தகவலில் இடம்பெற்றன.” என்றார்.