தமிழ்நாடு

புயல் பாதித்த ஒரு கிராமத்தை தத்தெடுக்க உள்ளேன் - நடிகர் விஷால்

புயல் பாதித்த ஒரு கிராமத்தை தத்தெடுக்க உள்ளேன் - நடிகர் விஷால்

webteam

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு கிராமத்தை தத்தெடுக்க உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 

‘கஜா’ புயலால் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின. ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும் சேதம் அடைந்தன. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. திரைப்பட நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களால் முடிந்த நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர். 

இதனிடையே கடந்த வியாழக்கிழமை டெல்லியில்  பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய குழுவை உடனடியாக அனுப்பி கஜா புயல் பாதிப்பை ஆய்வு செய்து, நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதையடுத்து இன்று தமிழகம் வந்த 7 பேர் கொண்ட மத்திய குழு புதுக்கோட்டையில் தனது ஆய்வை தொடங்கியது. 

மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான மத்திய குழுவினர் புயல் பாதிப்பு குறித்து சென்னையில் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்திற்குச் சென்றுள்ளனர். முதலில் குளத்தூர் பகுதியில் சேதமடைந்த வீடுகளை ஆய்வு செய்தனர். திருச்சி-புதுக்கோட்டை சாலையில் மின் கம்ப சீரமைப்புப் பணிகளை பார்வையிட்டனர். 

புதுக்கோட்டை காஞ்சிநகர் பகுதியில் சேதமடைந்த வீடுகளை ஆய்வு செய்து மக்களிடம் குறைகளைக் கேட்டனர். அங்கிருக்கும் அதிகாரிகளிடமும் விவரங்களைக் கேட்டறிந்தனர். அதைத்தொடர்ந்து வடகாடு, மாங்காடு ஆகிய பகுதிகளில் சேதமடைந்த தென்னை, வாழை ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் போது இருள் சூழ்ந்திருந்தது. ஆய்வின் போது சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வுக்காக திட்டமிடப்பட்டிருந்த செம்பட்டி விடுதி, ஆதனக்கோட்டை உள்ளிட்ட 4 பகுதிகளுக்கு மத்திய குழு செல்லவில்லை. இந்த ஆய்வு 3 நாட்கள் நடைபெற உள்ளது.     

இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு கிராமத்தை தத்தெடுக்க உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய விஷால், தத்தெடுக்க உள்ள கிராமத்தை முன்மாதிரியான கிராமமாக உருவாக்குவேன் என்று கூறியுள்ளார்.