தமிழ்நாடு

முதல்வரிடம் வாழ்த்துபெற ஆவலாக உள்ளேன்: செஸ் போட்டியில் வென்ற மாணவியின் ஆசை

முதல்வரிடம் வாழ்த்துபெற ஆவலாக உள்ளேன்: செஸ் போட்டியில் வென்ற மாணவியின் ஆசை

kaleelrahman

ஒடிசாவில் கிட் பல்கலைக்கழகம் நடத்திய சதுரங்கப் போட்டியில் எட்டு வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஒன்றாம் வகுப்பு மாணவி இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சரவணன் - அன்புரோஜா தம்பதியர். இவர்களது மகள் சர்வானிகா (6) உடையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் 4 வயதில் இருந்தே சதுரங்க விளையாட்டில் ஆர்வமாக இருந்த இவருக்கு சதுரங்க விiளாட்டை கற்று கொடுத்து பெற்றோர் ஊக்கிவித்துள்ளனர். இதையடுத்து மாநில அளவில் அரசு பள்ளிகளில் நடந்த சதுரங்க போட்டிகளில் சர்வானிகா நன்றாக விளையாடி வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிவந்த சர்வானிகா பள்ளி மற்றும் மாநில அளவில் பல வெற்றிகளை பெற்றுள்ளார். இந்நிலையில், ஒடிசா மாநிலம் கிட் பல்கலைகழகத்தில் 16-05-22 முதல் 20.05.22 வரை 7 வயதிற்குட்பட்டோருக்காக நடைபெற்ற சதுரங்க போட்டியில் 28 மாநிலத்தில் இருந்து சதுரங்க வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் தமிழக அணியின் சார்பாக பங்கேற்ற சர்வானிகா 9 சுற்றுகளாக நடைபெற்ற சதுரங்க போட்டில் 8 சுற்றுகளில் வெற்றி பெற்ற முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். 2022 ஆம் ஆண்டுக்கான நேஷனல் பள்ளி சதுரங்க சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார்.

இதுகுறித்து சர்வானிகா கூறும்போது சிறுவயதிலிருந்தே சதுரங்க போட்டியின் மீது ஆர்வம் இருந்தது. எனது பெற்றோர்கள் ஆசிரியர்கள் என அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்து இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு உதவிகரமாக இருந்தனர். இந்திய அளவில் முதலிடம் பெற்றதை அடுத்து தமிழக முதலமைச்சர் அவர்களிடம் வாழ்த்து பெற ஆவலாக உள்ளதாக தெரிவித்தார்.