தமிழ்நாடு

'நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்‘- பயணிகளுடன் ஆட்டோ ஓட்டிச்சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர்

kaleelrahman

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஐந்து கிலோ மீட்டர் தூரம் ஆட்டோ ஓட்டிச்சென்று பயணிகளை இறக்கி விட்ட நிகழ்வு காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.


அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த தொகுதியான புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற அமைச்சர் விஜய பாஸ்கர் கிராம மக்களோடு, பொங்கல் விழாவை கொண்டாடினார்.

அதன் ஒரு பகுதியாக அவரது சொந்த ஊரான இலுப்பூரில் இருந்து தென்னலூர் கிராம பொங்கல் விழாவிற்காக தனது காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது இலுப்பூர் சாலையில் ஒரு ஆட்டோவில் மாணவிகள், சிறுவர்கள் மற்றும் பெண்கள் பெரியகுரும்பம்பட்டிக்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தனர்.

இதனை கவனித்த அமைச்சர் விஜயபாஸ்கர் அந்த ஆட்டோவை தானே ஓட்டிச் சென்று அந்த பெண்கள் சிறுவர்கள் மற்றும் மாணவிகளை அவர்களின் சொந்த ஊரில் இறக்கி விடுவதாக கூறி ஆட்டோவில் ஏறினார். இதனால் உற்சாகம் அடைந்த ஆட்டோவில் இருந்த பயணிகள் மகிழ்ச்சியோடு ஆட்டோவில் பயணிக்கத் தொடங்கினர்.


இலுப்பூரில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள பெரியகுரும்பம்பட்டி வரையில் ஆட்டோவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஓட்டிச் சென்றார். அதன்பின் அங்கு சிறுவர்கள் பெண்கள் மற்றும் மாணவிகளை இறக்கிவிட்டார்.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மக்களை கவர்வதற்காகவே அவர் ஆட்டோவை ஓட்டிச் சென்றிருக்கலாம் என சிலர் தெரிவித்தனர்.