ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கப்போவதில்லை என முதலமைச்சர் கூறியதாக, அவரை நேரில் சந்தித்த போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நெடுவாசல் போராட்டக்குழுவைச் சேர்ந்த 11 பேர் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று காலை சந்தித்தனர். அப்போது, ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட நடவடிக்கை எடுக்குமாறு போராட்டக்குழுவினர் வலியுறுத்தினர். இந்தச் சந்திப்பின்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் உடனிருந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் வேலு, ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது என முதல்வர் கூறியதாகத் தெரிவித்தார். தமிழக அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி, வணிக ரீதியான அனுமதி கோரப்படவில்லை என முதல்வர் குறிப்பிட்டதாகவும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.